உணவு, நவநாகரிகம், கலைகள், புராணம் ஆகிய கருப்பொருள்களில் இவ்வாண்டு லிட்டில் இந்தியாவில் தீபாவளிப் பண்டிகை களைகட்டவுள்ளது.
பொதுமக்களின் கண்களுக்கு விருந்தூட்டும் வண்ணம் கலை நிகழ்ச்சிகள், சமையல் செய்முறை விளக்கம், ஆடை அலங்காரம், கலைப் பயிலரங்குகள், கதை சொல்லும் அங்கங்கள் என பட்டியலிட்டுக்கொண்டே போகும் வகையில் புதிய அம்சங்களை பொதுமக்கள் இம்மாதம் 14ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 12ஆம் தேதி வரை எதிர்பார்க்கலாம்.
முதல்முறையாக பொதுமக்கள் இந்திய மரபுடைமை நிலையத்தில் இடம்பெறவிருக்கும் பாரம்பரிய இந்திய நடன வடிவமான ‘கதக்’ நடன நிகழ்ச்சியைக் கண்டுகளிக்கலாம். ஹைதராபாத் சைவ இறைச்சி செய்முறை விளக்கம், இந்தியர்கள் தீபாவளிக்கு விரும்பி உண்ணும் இனிப்பு வகையான லட்டு செய்முறை, லிட்டில் இந்தியாவின் பண்டிகை உணர்வில் மக்கள் களிப்புற உணவுத்தடம் முதலிய நிகழ்வுகள் அடங்கியுள்ளன.
அத்துடன், இந்திய ஆடை அலங்கார வகுப்பு மூலம் பொதுமக்கள் சேலை கட்டும் நுணுக்கங்களையும், மருதாணியிடும் முறைகளையும் கற்றுக்கொள்ளலாம். தென்னிந்திய நகைகளுக்கு வண்ணம் பூசும் பயிலரங்கு மூலம் நகைகளின் மரபைப்பொதுமக்கள் அறிந்துகொள்ள முடியும்.
தஞ்சைக் கலைப் பயிலரங்கில் பங்கேற்பவர்கள் தென்னிந்திய கலை வடிவங்களை செய்முறைப் பயிற்சி வடிவில் புரிந்துகொள்ளலாம்.
ராதா-கிருஷ்ணா கருப்பொருளில் நடைபெறும் இவ்வாண்டு தீபாவளிக் கொண்டாட்டத்தில் இந்துக் கடவுள் கிருஷ்ணாவுக்கும் ராதாவுக்கும் இடையிலான காதல் கதையை நாடகமாக்கப்பட்ட காட்சிக்கூடச் சுற்றுலா மூலம் பொதுமக்கள் ரசித்து மகிழலாம்.
இந்திய மரபுடைமை நிலையத்தின் பொது மேலாளரான மரியா பவானி தாஸ், “இம்முறை நான்கு வித்தியாசமான கருப்பொருள்களில் தீபாவளிக் கொண்டாட்டம் நடக்கவுள்ளது. இதன் மூலம் இந்தியர்கள் மட்டுமன்றிப் பிற இனத்தவர்களும் கலந்துகொண்டு நம் இந்தியக் கலாசாரத்தை, குறிப்பாக தீபாவளி பண்டிகை சார்ந்த அதிகமான தகவல்களை அறிந்துகொள்ளலாம்,” என்று சொன்னார்.
ஆண்டுதோறும் லிட்டில் இந்தியாவில் தீபாவளிப் பண்டிகை களைகட்டும் அதே நேரத்தில் சிண்டாவின் ‘புரோஜெக்ட் கிவ்’ திட்டம் இடம்பெறும்.
முன்னோட்ட நிகழ்வில் கலந்துகொண்ட சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரியான அன்பரசு ராஜேந்திரன், “இந்த ஆண்டு புதுமையான முறையில், இளையர்கள் சிலர் முதியோரை இந்திய மரபுடைமை நிலையத்துக்கு அழைத்து வந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யவுள்ளனர். மேலும், வழக்கமாக நடைபெறுவதுபோல சமூகத்துக்குத் திருப்பி வழங்கும் திட்டங்களும் உள்ளன,” என்று தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை மாலை இந்திய மரபுடைமை நிலையத்தில் இடம்பெற்ற தீபாவளிப் பண்டிகை முன்னோட்ட வரவேற்பு நிகழ்வில் நிகழ்ச்சிகள் பற்றிய கூடுதல் விவரங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன. குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள பொதுமக்கள் முன்பதிவு செய்ய வேண்டும்.
சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் அனுமதி இலவசம். நிகழ்ச்சிகள் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு பொதுமக்கள் https://ihc-programmes.peatix.com, https://ihc-programmes.peatix.com என்ற இணையத்தளங்களை நாடலாம்.

