‘சிங்கப்பூரின் அமைதியைக் கெடுக்கும்வெளிநாட்டு விவகாரங்களுக்கு அனுமதியில்லை’

இஸ்ரேல்-ஹமாஸ் போர் பற்றி கா.சண்முகம்

‘சிங்கப்பூரின் அமைதியைக் கெடுக்கும்வெளிநாட்டு விவகாரங்களுக்கு அனுமதியில்லை’

3 mins read
b649894a-704f-4c97-8fab-a74ce20c148f
**Embargoed till 5pm Oct 12, 2023** மத்திய கிழக்கு விவகாரம் உணர்வுகளைத் தூண்டுவதாக இருந்தாலும் சிங்கப்பூரர்கள் அமைதி காக்க வேண்டும் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் வலியுறுத்தியுள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில் சிங்கப்பூரின் அமைதியைக் கெடுக்கும் எந்தவித வெளிநாட்டு விவகாரங்களுக்கும் இங்கு இடமில்லை என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

“சிங்கப்பூர், தெற்கு ஆசியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தும். இதுவொரு சிரமமான காலக்கட்டம். ஆனால் நமது அடிப்படை அம்சங்களை மாற்ற முடியாது.

“நாம் அனைவரும் சிங்கப்பூரர்கள். சிங்கப்பூரில் விலைமதிப்பில்லாத அமைதியைக் கொண்டிருக்கிறோம். இதனை பாதிக்கும் வகையில் அந்நிய விவகாரங்களை அனுமதிக்கக் கூடாது.

“மத்திய கிழக்கு வட்டார நிகழ்வுகள் உணர்வுகளைத் தூண்டுவதாக இருந்தாலும் சிங்கப்பூரர்கள் அமைதி காக்க வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இஸ்ரேல்-ஹமாஸ் விவகாரத்தால் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. மோதல் மோசமாகும்போது மக்களுக்கு இடையிலான பிளவு பெரும்பாலும் இனம் மற்றும் சமய அடிப்படையில் ஏற்படலாம். இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் அப்பாவி மக்கள் சிக்கியிருப்பதும் உணர்வுகளைத் தூண்டக்கூடியது. இருந்தாலும் நமது சமய நல்லிணக்கம், புரிந்துணர்வு போன்ற அடிப்படை அம்சங்களில் வலுவான நிலையில் இருக்கிறோம் என்றார்.

“நமது இன, சமய அமைப்புகளிடையே பரஸ்பர மரியாதை, நம்பிக்கை நிலவுகிறது. சிங்கப்பூரர்களும் இன, சமய நல்லிணக்கத்தை மிகவும் மதிக்கின்றனர்,” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றை அவர் சுட்டிக்காட்டி பேசினார்.

சிங்கப்பூரில் சமயங்களுக்கு இடையிலான சகிப்புத்தன்மை, மற்ற இன, சமயங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உச்சத்தில் இருப்பதை ‘பிவ்’ ஆய்வு நிலையம் கண்டறிந்தது.

ஆனால் தெற்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த பலர், தங்களுடைய நாட்டின் பெரும்பான்மை சமயத்தைச் சேர்ந்தவராக இருப்பது நாட்டின் அடையாளத்துக்கு முக்கியம் என்று கூறியிருந்தனர்.

“சிங்கப்பூரில் அத்தகைய நிலை இல்லை. இங்குள்ள 90 விழுக்காட்டினர், சிங்கப்பூரின் பல சமயங்களின் கலாசார, பண்புகளுடன் இணக்கமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதனை பல நாடுகளில் பார்க்க முடியாது. பெரும்பாலான சிங்கப்பூரர்கள், சமய, இன, கலாசார பன்முகத்தன்மை நாட்டிற்கு நல்லது என்று கூறியுள்ளனர். இதுதான், சிங்கப்பூரை சிறப்பான நிலையில் வைத்துள்ளது.

“நமது சமயத் தலைவர்களும் நமது மக்களும் இதர பல நாடுகளுடன் ஒப்பிடும்போது மாறுபட்டவர்கள். பல ஆண்டுகளாக நாம் கட்டிக்காத்த, விலைமதிப்பிட முடியாத அமைதியை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் இரு நாடு என்ற தீர்வையே வலியுறுத்துவதாகக் கூறிய அமைச்சர், இது, இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு தரப்புகளும் தனித்தனி அண்டை நாடுகளாக செயல்பட அனுமதிக்கும் என்றார்.

“இஸ்ரேல்-பாலஸ்தீனம் விவகாரத்தில் நமது நிலையை பலமுறை தெளிவுபடுத்தியிருக்கிறோம். இரு நாடு என்ற தீர்வை நாம் ஆதரிக்கிறோம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த ஜூலையில் மத்திய கிழக்கு வட்டாரத்தில் இஸ்ரேல், பாலஸ்தீன தலைவர்களைச் சந்தித்த மூத்த அமைச்சர் டியோ சீ ஹியனும் இரண்டு நாடு என்பதே சிறந்த தீர்வாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் பள்ளிவாசல், பள்ளிகள் போன்ற முக்கிய இடங்களில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக பாதுகாப்பை மேம்படுத்தியிருக்கின்றன.

சிங்கப்பூரின் பாதுகாப்பு அமைப்புகளும் நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருகின்றன.

பிரதமர் லீ சியன் லூங், சென்ற ஞாயிற்றுக்கிழமை பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவுக்கு எழுதியிருந்த கடிதத்தில் ஹமாஸின் பயங்கரவாதத் தாக்குதலில் இஸ்ரேலியர்கள் பலர் உயிரிழந்த துயரச் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்திருந்தார்.

அந்தத் தாக்குதலை சிங்கப்பூர் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் செய்திகள் - பக்கம் 8

குறிப்புச் சொற்கள்