சிங்கப்பூரின் ஆகப்பெரிய சட்டவிரோதப் பண விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வெளிநாட்டவர்கள் 10 பேரில் ஒருவரான வாங் ஷுய்மிங்கிற்கு பிணை வழங்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பிணையின் நிபந்தனையாக, தம்மை 24 மணி நேர கண்காணிப்பின்கீழ் வைக்க அவர் கோரிக்கை விடுத்தபோதும் நீதிமன்றம் அதை நிராகரித்துவிட்டது.
துருக்கிய நாட்டவரான வாங் முன்மொழிந்த பரிந்துரைகள், அவர் விமானப் பயணம் மேற்கொள்ளக்கூடிய அபாயத்தைச் சரிசெய்வதற்கு திருப்திகரமானதாக இல்லை என்று நீதிபதி வின்செண்ட் ஹூங் கூறினார். வெளிநாடுகளில் அவரது சொத்துகள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட கடப்பிதழ்கள் இருப்பதையும் அவர் கைது செய்யப்பட்டதற்குப் பிறகு அவரது மின்னிலக்க நாணயச் சொத்துகள் இடமாற்றம் செய்யப்பட்டதையும் நீதிபதி சுட்டினார்.
உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்ட 42 வயது வாங், பிணை வழங்கக் கோரியிருப்பது இது இரண்டாவது முறை.
குற்றஞ்சாட்டப்பட்ட 10 பேரில் அவ்வாறு கோரியிருக்கும் ஒரே நபர் அவர் மட்டுமே. தம் கட்சிக்காரருக்குப் பிணை வழங்க மறுத்து செப்டம்பர் 29ஆம் தேதி மாவட்ட நீதிபதி விடுத்த உத்தரவு தவறானது என்று வாங்கின் வழக்கறிஞர் வெண்டெல் வோங் வாதிட்டார்.
வாங்கிற்குப் பிணை வழங்க மறுத்து விடுக்கப்பட்ட உத்தரவில் தவறு ஏதும் இருப்பதாக தமக்குத் தெரியவில்லை என்று நீதிபதி ஹூங் கூறினார்.
“மாவட்ட நீதிபதி முன்னிலையிலும் இந்த மனுவிலும் மனுதாரரின் விவாதம் தகுதியற்றவை. பிணை வழங்கப்படுவதற்கான நிலைப்பாட்டை ஆதரிக்கவில்லை,” என்றார் அவர்.
கீழ் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யவோ பிணை வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு செய்யவோ தொடர்ந்து தெரிவுகள் உள்ள அதே வேளையில், மனுவுக்கு வலுசேர்க்கும் ஆதாரங்கள் இருப்பதை வாங் உறுதிசெய்ய வேண்டும் என்று நீதிபதி நினைவூட்டினார்.


