ஊழியர்களிடம் தகாத முறையில் பேசிய மாது

1 mins read
a4f9b2ac-36f9-4adc-8672-3b48cbb86ed4
சீன சமூக ஊடகத் தளமான ‘டூயின்’இல் வெளியிடப்பட்ட காணொளியில், காவல்துறையினர் அந்த மாதை விசாரிப்பதைக் காணமுடிந்தது.  - படங்கள்: டூயின்

மாது ஒருவர் தான் சிங்கப்பூரர் அல்லாததால் இங்குள்ள மருத்துவமனையில் தமக்கு சிகிச்சை மறுக்கப்பட்டதாக கூறியதை, சிங்கப்பூர் பொது மருத்துவமனை (எஸ்ஜிஎச்) மறுத்துள்ளது.

சீன சமூக ஊடகத் தளமான ‘டூயின்’இல் அதன் தொடர்பிலான காணொளி ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டது.

அந்த மாது தாம் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டதைப் படமெடுத்துக்கொண்டிருந்தார்.

அவர் மருத்துவமனை ஊழியர்களிடம் தகாத முறையில் பேசியதாகப் புகார் வந்ததைத் தொடர்ந்து, சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர்.

அந்த மாது, தம்மை கார் ஒன்று மோதியதாகவும், தாம் மூன்று மணி நேரம் மருத்துவமனையின் அவசரப் பிரிவில் காத்திருந்ததாகவும் கூறினார். தாம் சிங்கப்பூரர் அல்ல என்பதால் தமக்கு சிகிச்சை வழங்கப்படாது என்று தாதி ஒருவர் தம்மிடம் கூறியதாக அந்த மாது சொன்னார்.

இருப்பினும், மருத்துவக் குழு தீவிரமாகச் சோதித்ததைத் தொடர்ந்து, மருத்துவமனையைச் சென்றடைந்த இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அவர் வெளியேறியதாக எஸ்ஜிஎச், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியது.

முகக் கவசம் அணிய மறுத்த பிறகு அந்த மாது, ஊழியர்களிடம் அவ்வாறு பேசத் தொடங்கியதாக மருத்துவமனை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்