சிங்கப்பூரில் ஜனவரிக்கும் ஆகஸ்ட்டுக்கும் இடையில் திருட்டு மென்பொருள், செயலி மோசடிகளுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 1,400க்கும் அதிகம். அவர்கள் குறைந்தபட்சம் $20.6 மில்லியன் தொகையை இழந்து இருக்கிறார்கள் என்று காவல்துறை தெரிவித்தது.
இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கும் ஆகஸ்ட் மாதத்திற்கும் இடையில் சுமார் 650 பேர் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை இந்த ஆண்டின் முதல் பாதி எண்ணிக்கையை ஏறக்குறைய ஒத்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலை-ஆகஸ்ட் காலகட்டத்தில் இத்தகைய திருட்டு செயலி மோசடிகளுக்கு இலக்கானவர்கள் சுமார் $10.6 மில்லியன் தொகையை இழந்து இருக்கிறார்கள். இந்த அளவும் முதல் பாதியில் அப்பாவிகள் இழந்த தொகை அளவும் ஏறக்குறைய ஒன்றாக இருக்கிறது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை அத்தகைய மோசடிகளுக்கு 750க்கும் மேற்பட்டவர்கள் இலக்காகி இருக்கிறார்கள். அவர்கள் குறைந்தபட்சம் $10 மில்லியன் தொகையை இழந்து இருக்கிறார்கள்.
இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடும் மோசடிப்பேர்வழிகள், போலியான ஆன்ட்ராய்டு செயலிகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி அப்பாவி மக்களை வசியப்படுத்திவிடுவார்கள்.
அந்தச் செயலிகள் மூலம் செயல்படும்போது அப்பாவிகள் தங்களுடைய இணைய வங்கி, வங்கி அட்டை விவரங்களைக் கொடுத்து பணத்தை இழந்துவிடுகிறார்கள்.
இத்தகைய மோசடிகளைக் கருத்தில் கொண்டு சிங்கப்பூரில் செயல்படும் முக்கியமான பெரிய வங்கிகள் தற்காப்பு அரண்களை பலப்படுத்தி இருக்கின்றன.
இது பற்றி கருத்து கூறிய சிங்கப்பூர் வங்கிகள் சங்கத்தின் பேச்சாளர், வங்கிகள் நடைமுறைப்படுத்தி இருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள், திருட்டுச் செயலிகளையும் மென்பொருள்களையும் கண்டுபிடித்துவிடும். அவற்றைத் தடுத்துவிடும்.
தொடர்புடைய செய்திகள்
இருந்தாலும்கூட வாடிக்கையாளர்கள் முழு விழிப்புநிலையில் இருந்துவருவதுதான் மோசடிகளில் இருந்து தப்பிக்க தலைசிறந்த வழியாக இருக்கும் என்று கூறினார்.

