காஸா பகுதியில் அதிகரித்துவரும் உயிரிழப்புகளும் மனிதநேய நெருக்கடியும் சிங்கப்பூரர்களுக்குப் பெரும் துயரத்தை அளிப்பதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு எதிர்தாக்குதலாக அமைந்த இஸ்ரேலிய ராணுவச் செயல்பாடுகளை அடுத்து சிங்கப்பூரில் இவ்வாறு கவலை எழுந்துள்ளது.
அமைச்சு திங்கட்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில், “ஹமாஸ் வேண்டுமென்றே மக்களைக் குறிவைத்து, அவர்களைக் கொன்று, கடத்தி, பயங்கரமான அருவருப்புமிக்க செயல்களைச் செய்துள்ளது. இந்த அட்டூழியங்களை எந்தக் காரணம் கூறியும் நியாயப்படுத்த முடியாது. ஹமாஸ் பிணையில் வைத்திருக்கும் மக்களை உடனடியாகப் பாதுகாப்பான முறையில் விடுவிக்க நாங்கள் கோருகிறோம்,” என்றது.
இஸ்ரேல் அதன் மக்களையும் பகுதியையும் தற்காத்துக்கொள்ளும் சட்டபூர்வ உரிமையைக் கொண்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.
“இருப்பினும் இந்த உரிமையை அது பயன்படுத்திக்கொள்ள அனைத்துலக சட்டத்துடன் இஸ்ரேல் ஒத்துப்போக வேண்டும். இதில் போர் தொடர்பான சட்டங்களும் உள்ளடங்கும்,” என்றது அமைச்சு.
இதற்கிடையே, மனிதநேய நெருக்கடியைச் சமாளிக்க சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் அரசாங்கம் $300,000ஐ நிவாரணச் செயல்பாடுகளுக்காக வழங்கவுள்ளது.

