தீபாவளி அலங்கரிப்பில் மிளிரும் ரயில்கள், பேருந்துகள்

1 mins read
90780cd0-c3d5-4afc-9628-0e8c3ad6652f
ரயில்பெட்டியின் தரையிலும் சுவர்களிலும் தீபாவளி சார்ந்த வண்ணப் படங்களும் வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. - படம்: தினேஷ் குமார்
multi-img1 of 2

தீபாவளிக் கொண்டாட்டங்களை முன்னிட்டு வண்ணமயமான பாரம்பரிய அலங்காரங்கள் அடுத்த ஆறு வாரங்களுக்குக் குறிப்பிட்ட சில பெருவிரைவு ரயில்களிலும் பேருந்துச் சேவைகளிலும் இடம்பெறும்.

தீபாவளி அலங்காரம் பூண்டுள்ள ஆறு எம்ஆர்டி ரயில்களும் ஐந்து பேருந்துகளும் திங்கட்கிழமையிலிருந்து (அக்டோபர் 16) செயல்பட்டு வருகின்றன.

பெரும்பாலும் இளஞ்சிவப்பு, ஊதா, மஞ்சள் நிறங்கள் நிறைந்த மலர்க்கோல, தீப வடிவங்களும் தீபாவளி வாழ்த்து வாசகங்களும் வண்ண ஓவியங்களும் ரயில்களில் இடம்பெற்றுள்ளன.

தீபாவளி கொண்டாடப்படுவதன் காரணத்தை விளக்கும் ஆங்கில விவரக் குறிப்புகளுடன் ‘கொவ்.எஸ்ஜி’ காணொளி ஒன்றுக்கான கியூஆர் குறியீடுகளும் காணப்படுகின்றன.

பேருந்துகளைப் பொறுத்தவரை, பேருந்துச் சேவை எண்கள் 67, 147, 166, 106, 960 ஆகியவை அலங்கரிக்கப்பட்டுள்ளன.

ரயில், பேருந்துகள் மட்டுமன்றி, லிட்டில் இந்தியா, கிரேட் வோர்ல்டு, ஊட்ரம் பார்க், அங் மோ கியோ, பிடோக் ஆகிய ரயில் நிலையங்களும் விழாக்கோலம் பூண்டுள்ளன.

தீபாவளி உணர்வில் பயணிகளைத் திளைக்க வைக்கவே லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்துடன் (லிஷா) இணைந்து இந்த ஏற்பாட்டைச் செய்திருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

அதிகாரபூர்வ திறப்புவிழாவில் பங்கேற்ற தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட், அலங்கரிக்கப்பட்ட ரயிலில் ஹார்பர்ஃபிரண்ட் நிலையத்திலிருந்து லிட்டில் இந்தியா நிலையம் வரை சென்று சிறப்புக் கலைநிகழ்ச்சிகளைப் பார்வையிட்டார்.

இந்தச் சிறப்பு அலங்காரங்கள் நவம்பர் 26ஆம் தேதிவரை நீடிக்கும்.

குறிப்புச் சொற்கள்