கோயில் நகையை அடைமானம் வைத்த முன்னாள் தலைமை அர்ச்சகரின் மேல்முறையீடு நிராகரிப்பு

2 mins read
f3cee532-b982-442b-b882-e2af01daadbf
கந்தசாமி சேனாபதிக்கு மே மாதம் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் முன்னாள் தலைமை அர்ச்சகரான கந்தசாமி சேனாபதியின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது.

அவருக்குக் கடந்த மே மாதம் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மாவட்ட நீதிபதி அவ்வாறு தண்டனை விதித்தார்.

நம்பிக்கைத் துரோகம் தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளையும் குற்றச்செயல்கள் மூலம் ஈட்டிய தொகையை சிங்கப்பூருக்கு வெளியே அனுப்பியதையும் அவர் ஒப்புக்கொண்டார். தண்டனை விதித்தபோது, வழக்கில் தொடர்புடைய மேலும் ஆறு குற்றச்சாட்டுகளும் கருத்தில் கொள்ளப்பட்டன.

செவ்வாய்க்கிழமை (அக். 17), கந்தசாமிக்கு அதிகமான தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக அவரின் வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

மாவட்ட நீதிபதி தண்டனை விதித்தபோது கந்தசாமி நகைகளை அடைமானம் வைத்துப் பெற்ற மொத்தத் தொகையைக் கருத்தில்கொண்டது தவறு என்றும் கந்தசாமி அதன்மூலம் பெற்ற தொகை மிகக் குறைவு என்றும் வழக்கறிஞர் வாதிட்டார்.

கந்தசாமி கோயிலுக்குச் சொந்தமான ஒரு நகையை அடைமானம் வைப்பதும் பின்னர் அதை மீட்பதற்காக வேறொரு நகையை அடைமானம் வைப்பதுமாகப் பலமுறை குற்றம் புரிந்தார்.

இதில் மொத்தம் $2.3 மில்லியனை அடைமானம் வைத்துப் பெற்றபோதும் $141,054.90 மட்டுமே அவருக்குக் கிடைத்தது என்பதை வழக்கறிஞர் சுட்டினார். பெரும்பாலான தொகையை அடைமானத் தொகைக்கான வட்டியைச் செலுத்தவும் முன்னர் அடைமானம் வைத்த நகையை மீட்கவுமே செலவிடப்பட்டது என்றார் அவர்.

ஆனால் நீதிபதி வின்செண்ட் ஹூங் அந்த வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

கந்தசாமி கோயில் நகைகளை அடைமானம் வைத்து அந்தத் தொகையைப் பெற்றார். அதன் அடிப்படையில்தான் தண்டனை விதிக்கப்படுமேயன்றி, அதை அவர் எவ்வாறு பயன்படுத்தினார் என்பதைப் பொறுத்து அன்று என்று நீதிபதி கூறினார்.

இத்தகைய வாதம் நேர்மைக்குப் புறம்பானது என்றார் அவர்.

கந்தசாமி, இந்து அறக்கட்டளை வாரியத்தின்கீழ் செயல்படும் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில், 2013ஆம் ஆண்டு முதல் 2020 வரை பணிபுரிந்தார். 2018ஆம் ஆண்டு தலைமை அர்ச்சகராகப் பொறுப்பேற்றார்.

2014ஆம் ஆண்டு முதல், கோயிலின் 225 தங்க நகைகளைப் பாதுகாக்கும் பாதுகாப்புப் பெட்டகம் அவர் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது.

2016க்கும் 2020ஆம் ஆண்டுக்கும் இடையே 66 தங்க நகைகளை 172 முறை அவர் அடைமானம் வைத்தார்.

நகைகள் தொடர்பில் ஆலய நிர்வாகம் கணக்குத் தணிக்கை பார்க்கும்போதெல்லாம் அடைமானம் வைத்த நகைகளை கந்தசாமி மீட்டுவிடுவார்.

இவ்வாறு ஈட்டிய தொகையில் $141,054.90ஐத் தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கு மூலம் இந்தியாவிற்கு அனுப்பினார்.

2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவரது குற்றச் செயல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

தான் அடைமானம் வைத்த 66 நகைகளையும் கந்தசாமி ஒப்படைத்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் இந்தியாவிற்கு அனுப்பிய தொகை மீட்கப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்