“தொண்டூழியம் மூலம் பயனாளிகள் வெறும் உதவி பெற மட்டும் விரும்புவதில்லை. அவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் மதிக்கப்பட்டு கண்ணியத்தைப் பெற விரும்புகின்றனர். நானும் என் மனைவியும் பல வகைகளில் தொண்டூழியம் மூலம் உதவிக் கரம் நீட்டி மனம் நிறைந்துள்ளோம். தொண்டூழியம் புரியும் ஒருவர் தனது உடல் மற்றும் மனநலனை நன்கு பேணிக்காத்து ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழவும் முடியும்,” என்று அதிபர் தர்மன் சண்முகரத்தினம் குறிப்பிட்டார்.
தேசிய தொண்டூழியம் மற்றும் கொடையாளர் நிலையத்தின் ஏற்பாட்டில் அக்டோபர் 17ஆம் தேதி மாலை இஸ்தானாவில் நடைபெற்ற 11வது தொண்டூழியம் மற்றும் கொடையாளருக்கான அதிபர் விருது விழாவில் கலந்துகொண்டு அதிபர் தர்மன் உரையாற்றினார். கலாசார, சமூக, இளையர் துறை மற்றும் சட்ட இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங்கும் நிகழ்வில் கலந்துகொண்டார். விருதுபெற்ற 11 பேரில் ஒருவரான யுவன் மோகன், 35, இளையர் பிரிவில் சிறந்த தலைவர் எனும் அங்கீகாரத்தைப் பெற்றார்.
சிண்டா எனும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டு சங்கத்தின் இளையர் மன்றத் தலைவரான யுவன், அதற்கு அப்பாற்பட்டு தேசிய இளையர் மன்றம், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு ஆகிய இடங்களிலும் தனது தொண்டூழிய ஆற்றலை வெளிக்காட்டி வருகிறார். தொண்டூழியத்தில், குறிப்பாக இளையர்களின் தலைமைத்துவ மேம்பாட்டில் ஆர்வமும் கவனமும் செலுத்தும் யுவன், அடுத்த தலைமுறைத் தலைவர்களை உருவாக்கும் தீவிரத்தில் உள்ளார்.
இளையர்கள் சிலர் தொண்டூழியம் புரிய நாட்டமின்றி இருக்கும் வேளையில், யுவன் அதற்கு விதிவிலக்காக உள்ளார். தனது 12வது வயதில் பள்ளிகளில் தொடங்கிய அவரது தொண்டார்வம், 20 ஆண்டுகளுக்கு மேலும் தொடர்ந்து வருகிறது. தொண்டூழியம் தனது நட்பு வட்டத்தை விரிவாக்கியதாகப் பகிர்ந்துகொண்ட யுவனுக்கு தொண்டாற்றச் செல்வது வாழ்க்கை முறையாக மாறியது.
இளையர்கள் பள்ளிப் பருவத்தை கடந்த பிறகு தங்களின் முழு நேரப் பணிகளில் சிறப்பாக விளங்குவதற்கான திறன் வளர்ச்சிக்கு தொண்டு மூலம் அவர் கைகொடுத்து வருகிறார். பொதுக் கொள்கை துறையில் முழு நேரமாகப் பணியாற்றும் யுவன், தன் பணியில் செழித்தோங்க தொண்டூழியம் உறுதுணையாக இருந்ததாகப் பெருமையுடன் சொன்னார்.
அதையடுத்து ‘சிறந்த நகரம்’ என்னும் பிரிவில் ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லத்திற்கு விருது வழங்கப்பட்டது. மாணவர்களுக்கும் முதியவர்களுக்கும் இடையிலான உறவை வளர்க்கும் நோக்கில் கடந்த 13 ஆண்டுகளாக சிங்கப்பூர் சாரணியர் இயக்கத்தைச் சேர்ந்த மாணவிகள், ஸ்ரீ நாராயண மிஷன் இல்லத்திற்கு சென்று அங்கிருக்கும் மூத்தோருடன் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்கள் மூத்தோர் மீது அனுதாபம், புரிதல், மதிப்பு ஆகியவற்றை வெளிக்காட்டும் பண்பை வளர்த்துகொள்கின்றனர்.
விருதைப் பெற்றுக்கொண்ட ஸ்ரீ நாராயண மிஷன் இல்லத்தின் தலைமை நிர்வாக அதிகாரி செ. தேவேந்திரன், “நாங்கள் இளையர்களையும் மூத்தோரையும் இணைக்கும் வகையில் பல திட்டங்களை உருவாக்கி வருகிறோம். இல்லத்தில் இருக்கும் முதியவர்கள் பலர், மாணவர்களுடன் நேரத்தைச் செலவிட எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்கள். முதியவர்களில் சிலர் காலையில் எழுந்திருப்பதும் அதற்குத்தான்,” என்று கூறினார்.