சிங்கப்பூர் பொருளியலுக்கு புத்துயிரூட்டும் வகையில் 4,400 புதிய வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் உற்பத்தித் துறையில் இவ்வேலைகள் உருவாக்கப்பட்டதாக துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் புதன்கிழமை அன்று தெரிவித்தார்.
கொவிட்-19 கொள்ளைநோயிலிருந்து மீண்டு வந்தாலும் தொழிற்சாலை நடவடிக்கைகள் இன்னமும் வேகமெடுக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் 4,400 வேலைகள் உருவாக்கப்பட்டதாக திரு ஹெங் குறிப்பிட்டார்.
2023 ஆசிய பசிபிக் தொழில் உருமாற்றம் தொடர்பான நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் பேசினார்.
சிங்கப்பூர் எக்ஸ்போவில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்த ஆண்டு நடைபெற்ற இதே நிகழ்ச்சியிலிருந்து தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக கூடுதல் வேலைகள் உருவாக்கப்பட்டதாக திரு ஹெங் தெரிவித்தார்.
அந்தச் சமயத்தில் ஐந்து துறைகளைப் புதுப்பிக்கும் வகையில் தொழில் உருமாற்றுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அது, மின்னியல், துல்லியல் பொருளியல், எரிசக்தி மற்றும் ரசாயனம், விமானத் துறை, தளவாடத் துறை ஆகியவற்றை மேம்படுத்தவும் புதிய வாய்ப்புகளைக் கைப்பற்றவும் உதவியது.
புதிய வேலைகள் உருவாக்கப்பட்ட நிலையில் முதல் ஆறு மாதங்களில் உற்பத்தித் துறையில் வேலை இழக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்தது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த செப்டம்பர் மாதம் உற்பத்தித் துறையின் நிலை பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட போது தெம்பனிஸ் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டெஸ்மண்ட் சூ கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் இந்த விவரத்தைத் தெரிவித்திருந்தார்.
2023 முதல் காலாண்டில் வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை 1,400ஆக இருந்தது. அடுத்த மூன்று மாதங்களில் அது, 500க்குச் சரிந்தது என்று அவர் கூறியிருந்தார்.