ஏற்கெனவே நடப்பில் உள்ள அரசாங்க கொள்கைகளையும் அமலாக்க முறைகளையும் திருத்தி சீரமைப்பதோடு நின்றுவிடாமல் அவற்றை அரசாங்க ஊழியர்கள் மறுசிந்தனைக்கு உட்படுத்த வேண்டும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் வியாழக்கிழமை தெரிவித்தார்.
அப்படிச் செய்வதன் மூலம் அரசாங்கச் சேவை சிங்கப்பூரர்களிடத்தில் ஆக்ககரமான வேறுபாட்டைச் சாதிக்கும் என்று அவர் கூறினார்.
வருடாந்திர பொதுச் சேவை தலைமைத்துவ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுமார் 800 அரசாங்கச் சேவை பிரமுகர்களிடம் திரு ஹெங் உரையாற்றினார். அந்த விருது வழங்கும் நிகழ்ச்சி எக்ஸ்போ அபெக்ஸ் அரங்கில் நடந்தது.
மக்களுடைய கண்ணோட்டங்களை நல்ல முறையில் அரசாங்கச் சேவையாளர்கள் புரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது முக்கியமானது என்பதை அவர் வலியுறுத்திக் கூறினார்.
சிங்கப்பூரர்களின் வாழ்க்கையைச் சிறப்பாக்கிய அல்லது சிறப்பாக்கப் போகின்ற சில புத்தாக்க கொள்கை மாற்றங்களை அவர் பட்டியலிட்டார்.
கம்லிங்க் என்ற சமூகத் தொடர்பு செயல்திட்டத்தில் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு உதவக்கூடிய குடும்ப வழிகாட்டிகளை உருவாக்கும் திட்டம் அவற்றில் உள்ளடங்கும் என்றார் அவர்.
குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம், சோதனைச்சாவடிகளில் புதிய தானியக்க வழித்தடங்களை 2024 முதல் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தும். அப்போது கடப்பிதழ் இல்லாமல் சிங்கப்பூர்வாசிகளும் சுற்றுப் பயணிகளும் குடிநுழைவு அனுமதிப் பெற்றுச் செல்ல முடியும் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
நல்ல கொள்கைகளை வடிவமைத்து அவற்றை நல்ல முறையில் நாம் நிறைவேற்ற வேண்டும். இப்படிச் செய்வதன் மூலமாகவே நாம் மக்களிடம் நமக்குள்ள நம்பிக்கையை நிலைநாட்டி வரமுடியும், புதுப்பித்துக்கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் அரசாங்கச் சேவையில் 16 அமைச்சுகளிலும் 50க்கும் மேற்பட்ட ஆணைப் பெற்ற அமைப்புகளிலும் சுமார் 150,000 பேர் வேலை செய்கிறார்கள்.
அமைச்சுகளில் பணியாற்றும் 86,000 பேரை உள்ளடக்கிய குடிமைச் (சிவில்) சேவையும் அதில் உள்ளடங்கும்.
நிகழ்ச்சியில் பேசிய குடிமைச் சேவைத் தலைவர் லியோ யிப், துணைப் பிரதமர் திரு ஹெங் தெரிவித்த கருத்துகளை எதிரொலித்தார்.
பொதுச் சேவை காலத்திற்கேற்ப பரிணமிக்க விரும்ப வேண்டும் என்று அவர் கூறினார்.
இப்போதைய உலகத்தில் சிங்கப்பூரின் வெற்றியை பொதுச் சேவையினர் கிள்ளுக்கீரையாகக் கருதக் கூடாது. நல்ல ஆளுமையிலும் தலைமைத்துவத்திலும் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும் என்று திரு ஹெங் வலியுறுத்தினார்.
சிங்கப்பூரில் அரசியல் தலைமைத்துவ மாற்றம் இடம்பெறுகிறது. இந்த நிலையில், தானும் தன்னுடைய சகாக்களும் அரசாங்கச் சேவை தனிசிறப்போடும் நிபுணத்துவத்தோடும் தொடர்ந்து சேவையாற்றுவதை உறுதிசெய்யப் போவதாக அவர் தெரிவித்தார்.
பொதுச் சேவை அதிகாரிகள் குடிமக்களுடன் சிறந்த முறையில் ஈடுபாடு கொண்டிருக்க வேண்டும் என்றும் திரு ஹெங் யோசனை தெரிவித்தார்.
இதற்கு செயல் கூட்டணி (ஏஎஃப்ஏ) என்ற அமைப்பு நல்ல முன்மாதிரி என்று அவர் கூறினார்.
குடிமக்களுடன், குறிப்பாக இளைய தலைமுறையினருடன் பங்காளித்துவ உறவை மேம்படுத்துவதன் மூலம் எதிர்காலத்திற்கான இன்னும் சிறந்த சிங்கப்பூரைப் பலப்படுத்துகிறோம். ஆழமான குடியுரிமை உணர்வையும், ஈடுபாட்டு உணர்வையும் ஒற்றுமை உணர்வையும் பேணி வளர்க்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
எதிர்காலம் எப்படி இருந்தாலும் இந்த வழியில் ஒன்றாகச் சேர்ந்து சவால்களை நாம் சமாளிக்க முடியும்.
நெருக்கடி ஏற்படும் ஒவ்வொரு முறையும் அதை வெற்றிகரமான முறையில் சமாளித்து பலமிக்க நாடாக சிங்கப்பூர் எழ முடியும் என்று அவர் மேலும் கூறினார்.

