இஸ்ரேல்-ஹமாஸ் போரால் பாதிக்கப்பட்டு உள்ள காஸா குடிமக்களுக்கு சிங்கப்பூரில் உள்ள ஓர் அமைப்பு $100,000 மதிப்புள்ள நிவாரணப் பொருள்களை அனுப்பி வைக்க முன்வந்து உள்ளது.
‘ஹியுமெனிட்டி மேட்டர்ஸ்’ எனப்படும் அந்த மனிதாபிமான அமைப்பு அனுப்ப இருக்கும் பொருள்களின் எடை நான்கு முதல் ஐந்து டன் வரை இருக்கும் என மதிப்பிடுகிறது. உயிர்ச்சத்து மாத்திரைகள், குளிரைத் தாங்கும் போர்வைகள், தண்ணீரைச் சேமித்து வைப்பதற்கான பெரிய குவளைகள் உள்ளிட்ட பொருள்கள் அவை.
கிட்டத்தட்ட 100 பேர் அடங்கிய குழு ஒன்று அக்டோபர் 29ஆம் தேதி அந்தப் பொருள்களை ஒன்றிணைத்து அனுப்புவதற்கான பணிகளில் ஈடுபடும். பல்வேறு நம்பிக்கைக் குழுக்கள், நிறுவனக் குழுமங்கள், தனிப்பட்டவர்கள் மற்றும் ‘ஹியுமெனிட்டி மேட்டர்ஸ்’ அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் அந்தக் குழுவில் இருப்பர். எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு அந்தப் பொருள்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படும். அந்த அமைப்பின் வட்டார மனிதாபிமான உதவி வழங்குவதற்கான திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களும் அந்த விமானத்தில் செல்வர்.
பாலஸ்தீன மற்றும் எகிப்திய உதவிக்குழுக்களுடன் சேர்ந்து அவர்கள் நிவாரணப் பொருள்களை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவர் என்று கூறப்பட்டுள்ளது.

