தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிண்டாவுக்கு ‘ஃபேர்பிரைஸ்’ குழுமம் $40,000 நன்கொடை

1 mins read
bf509bcb-e8a6-4812-b55b-0fe2839f79b8
சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) தலைமை நிர்வாகி அன்பரசு ராஜேந்திரன், நன்கொடைக் காசோலையை ‘ஃபேர்பிரைஸ்’ அறக்கட்டளையின் பொது மேலாளர் ஜோனஸ் கோரிடமிருந்து (இடது) பெறுகிறார். அவர்களுடன் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா, ‘ஃபேர்பிரைஸ்’ குழுமத்தின் தலைமை நிர்வாகி விபுல் சாவ்லா. - படம்:  ‘ஃபேர்பிரைஸ்’ குழுமம்

தீபாவளிக் கொண்டாட்டங்களையொட்டி ‘ஃபேர்பிரைஸ்’ குழுமம் 40,000 வெள்ளி நன்கொடையை வழங்கி, வசதி குறைந்தோருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது.

அத்துடன் காக்கி புக்கிட், உட்லண்ட்ஸ் ஆகிய வட்டாரங்களில் கொண்டாட்ட விழாக்களை நடத்தப்போவதாகவும் அந்தப் பேரங்காடிக் குழுமம் அறிவித்துள்ளது.

ஜூரோங் பாயிண்ட் கடைத்தொகுதியிலுள்ள ‘ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா’ பேரங்காடியில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 20) காலை நடைபெற்ற, நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சிண்டாவின் நிர்வாகக் குழுத் தலைவரும் பிரதமர் அலுவலக அமைச்சருமான இந்திராணி ராஜா பங்கேற்றார்.

நிகழ்ச்சியின்போது உதவிப் பற்றுச்சீட்டுகளைப் பெற்ற சிலர், பேரங்காடியிலிருந்து உணவுப் பொருள்களை வாங்கினர்.

100 வெள்ளி பற்றுச்சீட்டு பெற்ற வசதிகுறைந்தோரில் ஒருவரான இல்லத்தரசி மலர்விழி நாகராஜு, 57, விழாக்காலச் செலவுகளுக்காக உதவி பெற்றதில் மகிழ்வதாகக் கூறினார்.

“வழக்கமாக முறுக்கு செய்ய பயன்படுத்தப்படும் எண்ணெய்யின் விலை கூடுதலாக இருப்பதால் இந்தப் பற்றுச்சீட்டைப் பயன்படுத்தி வாங்க முடிந்தது,” என்று அவர் கூறினார்.

நிதியாதரவும் சமூக உதவியும் தேவைப்படும் குடும்பங்களுக்காக ‘ஃபேர்பிரைஸ்’ இதுவரை 360,000 வெள்ளி நிதியை சிண்டாவுக்கு வழங்கியுள்ளது.

“கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வரும் இந்த சிண்டா - ஃபேர்பிரைஸ் கூட்டுமுயற்சி, வசதி குறைந்த மக்கள் யாரும் தனித்து விடப்படமாட்டார்கள் என்பதற்கு உறுதி கூறுகிறது,” என்றார் திரு அன்பரசு.

செய்தி: கி.ஜனார்த்தனன்

குறிப்புச் சொற்கள்