மூத்தோருக்கு இயந்திர மனிதன் மூலமாக உணவு விநியோகிக்கும் முறை குவீன்ஸ்டவுனில் உள்ள ஈரறை வாடகை வீடுகளில் சோதிக்கப்பட்டு வருகிறது.
‘எய்டன்’ என்பது அந்த இயந்திர மனிதனின் முழுப் பெயர், ஒரு நகல் இயந்திரத்தைபோல அது காட்சியளிக்கிறது.
வீட்டில் வசிக்கும் பலவீனமான முதியோர்கள் சுயமாக வாழ அனுமதிக்கும் திட்டத்தின் கீழ் இயந்திர மனிதன் உணவு விநியோகிக்கும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
எய்டன் சிறிய மின்தூக்கிகளில் ஏறி, குறுகலான தாழ்வாரங்களில் பயணம் செய்து உணவை விநியோகிக்கும் ஆற்றல் பெற்றது. மின்தூக்கியில் மாடிப் பொத்தானை அழுத்துவதற்காக அதற்கு நீளக்கூடிய ஒரு கையும் உள்ளது.
“ஒரு மனிதன் மின்தூக்கியில் பயணம் செய்வது போன்றது,” என்று லயன்ஸ் பீஃரெண்டர்ஸ் நிர்வாக இயக்குநர் கேரன் வீ தெரிவித்தார்.
அவரது சமூக சேவை அமைப்பு, கட்டட தானியக்கமுறைக்குப் பெயர்போன டெல்டா எல்க்ட்ரானிக்ஸ் சிங்கப்பூர் என்ற நிறுவனத்துடன் சேர்ந்து இந்தச் சோதனையை நடத்தி வருகிறது.
இதர வகையான பொருள்களை விநியோகிக்கும் இயந்திர மனிதனுக்கு மின்தூக்கியில் புளுடூத் அல்லது கம்பியில்லா இணையத் தொடர்பு வசதி இருக்க வேண்டும். அப்போதுதான் மின்தூக்கியுடன் இணைப்பை ஏற்படுத்தி இயந்திர மனிதன் செயல்பட முடியும். இதற்கு 300,000 வெள்ளி வரை செலவாகும் என்று கேரன் வீ கூறினார்.
கடந்த வாரம் ‘எய்டன்’ இயந்திர மனிதனின் சோதனை மெய் லிங் ஸ்திரீட்டில் உள்ள புளோக் 151ல் அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டது. அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை இந்தச் சோதனை நீடிக்கும்.
தொடர்புடைய செய்திகள்
இந்தத் தானியக்க சாதனம், ஒவ்வொரு நாளும் இரண்டு வேளை உணவை 67 முதல் 82 வயது வரை உள்ள மூத்தோருக்கு விநியோகிக்கும். தேவை ஏற்பட்டால் மருந்து, சலவைப் பொருள்கள் ஆகியவற்றை விநியோகிக்கும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.
வெளியே சென்று உணவு வாங்க முடியாதவர்கள், வீட்டில் சொந்தமாக சமைக்க முடியாதவர்கள், பராமரிப்பாளர்கள் இல்லாதவர்களுக்கு உதவ லயன்ஸ் பீஃபிரெண்டர்ஸ் நடத்தும் முதியோருக்கான திட்டத்தின்கீழ் இயந்திரமனிதன் சோதிக்கப்பட்டு வருகிறான்.