தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மிடில் ரோட்டுக்கு அருகே சைக்கிளோட்டிகளுக்கும் டாக்சி ஓட்டுநருக்கும் இடையே மோதல்

1 mins read
b1f87481-0ae0-4da7-a7cf-fb9422a0cf12
இணையத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில் டாக்சி ஒன்று திடீரென்று நின்றவுடன் சைக்கிளோட்டிகள் அதைச் சுற்றி வளைப்பதைக் காண முடிந்தது. - படம்: எஸ்ஜி ரோடு விஜிலாண்டே/ஃபேஸ்புக்

மிடில் ரோட்டுக்கு அருகே சனிக்கிழமை (அக். 21), சைக்கிளோட்டிகள் சிலருக்கும் கம்ஃபர்ட் டெல்குரோ டாக்சி ஓட்டுநருக்கும் இடையே நடந்த மோதலைக் காட்டும் காணொளி குறித்துக் காவல்துறை விசாரணை மேற்கொள்கிறது.

விக்டோரியா ஸ்திரீட்டுக்கும் மிடில் ரோட்டுக்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் நடந்த மோதல் தொடர்பில் காலை 8.30 மணியளவில் உதவி கேட்டு அழைப்பு வந்ததாகக் காவல்துறை கூறியது.

சைக்கிளோட்டிகளுக்கும் டாக்சி ஓட்டுநருக்கும் இடையிலான வாக்குவாதத்தைக் காட்டும் காணொளி எஸ்ஜி ரோடு விஜிலாண்டே ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிலவரப்படி அந்தப் பதிவு, 110,000 முறை பார்க்கப்பட்டுள்ளது. 880 பேர் அதற்கு விருப்பக் குறியீடு இட்டுள்ளனர். 1,700 கருத்துகள் பகிரப்பட்டுள்ளன.

காணொளியில், மூன்று தடங்கள் கொண்ட சாலையின் இடது, நடுத் தடங்களில் சைக்கிளோட்டிகள் ஐவர் சென்றதைக் காண முடிகிறது. அவர்கள் கம்ஃபர்ட் டெல்குரோ டாக்சிக்குப் பின்னால் சைக்கிளை ஓட்டிச் சென்றனர்.

போக்குவரத்துச் சமிக்ஞை விளக்கிற்காக, டாக்சி திடீரென்று நின்றது. அதற்கு முன்னாலிருந்த வாகனத்துக்கும் டாக்சிக்கும் இடையே ஒரு கார் அளவு இடைவெளி இருந்தது. ஆனால் பின்னால் சென்ற சைக்கிளோட்டிகளில் ஒருவர் டாக்சியின் பின்புறத்தை இடிக்க நேர்ந்ததுபோல் தெரிகிறது.

இதையடுத்து மற்ற சைக்கிளோட்டிகள் டாக்சியைச் சுற்றிவளைத்தனர்.

மற்றொரு காணொளியில் சைக்கிளோட்டிகளும் டாக்சி ஓட்டுநரும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டிக்கொள்வது தெரிகிறது.

41 வயது ஆடவர் ஒருவர் லேசாகக் காயமடைந்ததாகவும் அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்