நவம்பர் மாதம் வாகனங்களில் அடுத்த தலைமுறை மின்னியல் சாலைக் கட்டணக் கருவி

நவம்பர் மாதம் வாகனங்களில் அடுத்த தலைமுறை மின்னியல் சாலைக் கட்டணக் கருவி

2 mins read
db3e2a80-c677-4a8d-b36d-374935779729
நவம்பர் மாதம் முதல் வாகனங்களில் பொருத்தப்பட உள்ள புதிய அடுத்த தலைமுறை மின்னியல் சாலைக் கட்டணக் கருவி. - படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

செயற்கைக்கோள் சார்ந்த மின்னியல் சாலைக் கட்டணக் கருவியை வாகனங்களில் பொருத்தும் நடவடிக்கை நவம்பர் மாதம் 1ஆம் தேதியிலிருந்து தொடங்கும்.

புதிய வாகனங்களில் இந்தக் கருவி 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இருந்து துவங்கும். அத்துடன், தற்பொழுது சாலையில் இருக்கும் வாகனங்களில், பகுதி பகுதியாக, வாகனங்களின் கால ஓட்டத்திற்கு ஏற்ப அவற்றில் பொருத்தப்படும்.

வாகனங்களில் பொருத்தப்பட உள்ள கருவிகள் கைக்கு அடக்கமாக இல்லை என்ற பொதுமக்கள் கருத்துக்கேற்ப, வாகனமோட்டிகள் இவற்றுக்கு பதிலாக தங்கள் வாகனங்களில் இந்தக் கருவியின் தொடுதிரைக்கு மாற்றாக அதில் கிடைக்கப்பெறும் தகவல்களை தங்கள் கைப்பேசிகளிலேயே பெறும் வசதியைப் பெறலாம்.

இதை திங்கட்கிழமை நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

வாகனங்களில் பொருத்தப்பட உள்ள கருவி மூன்று பாகங்களைக் கொண்டது. அதில் முதல் பகுதி வாகனமோட்டியின் கால் பகுதியில் அமையவுள்ள கருவியின் தகவல் பதிவுப் பகுதி. கருவியின் அலைவாங்கியும் தொடுதிரையும் வாகனத்தின் முன்பகுதி கண்ணாடித் திரையில் அமைந்திடும்.

இது மோட்டார்சைக்கிள்களில் ஒரே கருவியாக மோட்டார்சைக்கிளின் கைப்பிடியில் பொருத்தப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களில் எப்பொழுது இந்தக் கருவியை பொருத்த வேண்டும் என்பதுடன் அவர்கள் இதைப் பொருத்துவதற்கான நேர ஒதுக்கீட்டை எவ்வாறு செய்துகொள்ளலாம் என்பது பற்றியும் அவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

இந்தக் கருவியை பொருத்த இரண்டு மாதகால அவகாசம் வழங்கப்படும. இந்தக் காலகட்டத்தில் இதை இலவசமாகப் பொருத்திக் கொள்ளலாம் என்று ஆணையம் விளக்கியுள்ளது. இது குறித்து அவரவரின் வாகனங்களில் கருவியைப் பொருத்துவது தொடர்பான விவரங்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தெரியவரும் என்றும் ஆணையம் தெரிவித்தது.

இந்தப் புதிய அடுத்த தலைமுறை சாலை மின்னியல் கட்டண முறை 25 ஆண்டுகாலமாக நடப்பிலிருக்கும் தற்போதைய மின்னியல் கட்டண முறைக்கு மாற்றாக விளங்கும். தற்போதைய முறை அதன் காலநிலையின் இறு;திக் கட்டத்தை நெருங்கிவிட்டதாக ஆணையம் தெளிவுபடுத்தியது.

செயற்கைக்கோள்வழி சாலை மின்னியல் கட்டண முறை பயண தூர அடிப்படையில் கட்டணம் வசூலிக்கும் முறையை கடைப்பிடிக்க உதவும் என்றபோதிலும் வாகனமோட்டிகள் பயணம் செய்யும் தூர அடிப்படையில் உடனடியாக கட்டணம் விதிக்கும் எண்ணம் இல்லை என ஆணையம் விளக்கமளித்துள்ளது.

சாலை மின்னியல் கட்டண முறை மாறும் இந்த காலகட்டத்தில் சாலைக் கட்டண முறையில் மாற்றம் இருக்காது என்று ஆணையம் தெரிவித்துள்ளது. எனினும், இந்தக் காலகட்டம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று ஆணையம் தெரிவிக்கவில்லை. புதிய மின்னியல் சாலைக் கட்டண முறை கருவி பொருத்தப்பட்டபின் தற்போதைய மின்னியல் கட்டண நுழைவாயில்கள் படிப்படியாக அகற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்