தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வியட்னாமிலிருந்து 1.2 கிகாவாட்மின்சாரம் இறக்குமதி

2 mins read
0553f55f-8432-41e1-b36d-75ef15fcf57f
செம்ப்கார்ப்பின் காற்றாலைகள் சிங்கப்பூர், இந்தியா (படம்), சீனா, வியட்னாம் உள்ளிட்ட நாடுகளில் செயல்படுகின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர், வியட்னாமிலிருந்து காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் 1.2 கிகாவாட் மின்சாரத்தை இறக்குமதி செய்யவிருக்கிறது.

2035ஆம் ஆண்டுவாக்கில் குறைந்தது 4 கிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை இறக்குமதி செய்வது குடியரசின் இலக்காகும்.

வியட்னாமிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சாரத்தால் அந்த இலக்கு ஓரளவு பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூருக்கு ஓராண்டுக்குத் தேவைப்படும் மொத்த மின்சாரத்தில் வியட்னாமிலிருந்து இறக்குமதியாகும் மின்சாரத்தின் பங்கு பத்து விழுக்காடாக இருக்கும்.

சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுள்ள கடலடி கம்பிவடம் மூலம் மின்சாரம் வியட்னாமிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது என்று எரிசக்தி சந்தை ஆணையம் செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்தது.

இதே போன்று, இந்தோனீசியாவிலிருந்து இரண்டு கிகாவாட்ஸ் மின்சாரமும் கம்போடியாவிலிருந்து ஒரு கிகாவாட்ஸ் மின்சாரமும் இறக்குமதி செய்ய ஏற்கெனவே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. நீர், சூரிய சக்தி, காற்றாலை ஆகியவற்றால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் இந்த இரண்டு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் கரிம வெளியேற்றம் மிகவும் குறைவு.

மூன்று நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் மின்சாரம் 2035ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் மின்சாரத் தேவையில் 30 விழுக்காடாக இருக்கும் என்று ஆணையம் மதிப்பிட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை மரினா பே சேண்ட்சில் நடைபெற்ற சிங்கப்பூர் அனைத்துலக எரிசக்தி வார நிகழ்ச்சியில் பேசிய வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சர் டான் சீ லெங், மின்சாரம் இறக்குமதி செய்வதற்காக வியட்னாம் பங்காளியான பெட்ரோவியட்னாம் டெக்னிக்கல் சர்வீசஸ் நிறுவனத்துடன் சேர்ந்து செயல்பட செம்ப்கார்ப் யூடிலிடிசுக்கு நிபந்தனையுடன்கூடிய ஒப்புதலை ஆணையம் வழங்கியிருப்பதாகத் தெரிவித்தார்.

இதற்கிடையே சிங்கப்பூர், அமெரிக்காவுடனான ஆசியானின் தற்போதைய, எதிர்கால மின்சார இணைப்புகள் பற்றிய ஆய்வை முடித்துள்ளது.

இந்த முதற்கட்ட ஆய்வில் வட்டார எரிசக்தி தொடர்பு, அதனால் ஏற்படும் சமூக-பொருளியல் பலன்கள் பற்றி ஆராயப்பட்டதாக திரு டான் சொன்னார்.

கரிம வெளியேற்றத்தைக் குறைப்பது, குறைந்த முதலீடு, போதுமான வளங்கள் இருப்பது, தடையற்ற மின்விநியோகம், பொருளியல் நன்மைகள், பசுமை சார்ந்த வேலை உருவாக்கம் ஆகியவற்றையும் ஆய்வு உள்ளடக்கியிருக்கிறது.

இந்த நிலையில் அமெரிக்காவும் சிங்கப்பூரும் இரண்டாம் கட்ட ஆய்வை விரைவில் தொடங்கவிருக்கின்றன. அதில் ஆளுமை, எல்லைகளுக்கு இடையிலான மின்சக்தி வர்த்தகத் திட்டங்களுக்கான நிதி கட்டமைப்பு உள்ளிட்டவை ஆராயப்படும் என்று திரு டான் தெரிவித்தார்.

இரு நாடுகளும் எப்போது 2வது கட்ட ஆய்வு தொடங்கப்படும் என்பதைத் தெரிவிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்