பால் இறக்குமதி: மிலமின் தொடர்பான தேவைகளை நீக்கவிருக்கும் சிங்கப்பூர்

1 mins read
f7a55a8a-3481-4d65-bf6f-e4579cb50586
சீனாவிலிருந்து சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்படும் பால் தொடர்பான பொருள்களை முகவை தொடர்ந்து சோதனை செய்யும் - படம்: தமிழ் முரசு

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால், பாலால் தயாரிக்கப்பட்ட பொருள்கள் ஆகியவற்றில் மிலமின் தொடர்பான தேவைகளை சிங்கப்பூர் நீக்க இருக்கிறது.

இது அடுத்த மாதம் 1ஆம் தேதியிலிருந்து நடப்புக்கு வரும் என்று சிங்கப்பூர் உணவு முகவை திங்கட்கிழமையன்று தெரிவித்தது.

இந்தத் தேவைகள் 2008ஆம் ஆண்டிலிருந்து நடப்பில் உள்ளது. மிலமின் எனும் ரசாயனம் பிளாஸ்டிக் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. 2008ஆம் ஆண்டில் சீனாவில் தயாரிக்கப்பட்ட குழந்தை பால் மாவில் மிலமின் இருப்பது தெரியவந்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து, சீனாவில் தயாரிக்கப்படும் பால் தொடர்பான பொருள்களுக்கான செய்முறையை அந்நாட்டு அதிகாரிகள் மிகவும் உன்னிப்பாக கண்காணித்ததாகவும் விதிமீறும் நிறுவனங்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டதாகவும் முகவை கூறியது.

தற்போதைய விதிமுறைகளின்படி சீன அதிகாரிகளால் சோதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட பிறகே அந்நாட்டிலிருந்து பால், பாலால் தயாரிக்கப்பட்ட பொருள்கள் சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்படலாம்.

அடுத்த மாதம் 1ஆம் தேதியிலிருந்து மிலமின் தொடர்பான தேவைகள் நீக்கப்பட்டாலும் சீனாவிலிருந்து சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்படும் பால் தொடர்பான பொருள்களை முகவை தொடர்ந்து சோதனை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்