ஓசிபிசி வங்கி அதன் ஊழியர்களுக்காக செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட ‘சாட்ஜிபிடி’ போன்ற தளத்தை உருவாக்கியிருக்கிறது.
ஏறக்குறைய 19 நாடுகளில் ஓசிபிசியின் வங்கிக் கிளைகள் செயல்படுகின்றன. அவற்றில் 30,000 ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர்.
ஆறு மாதகால சோதனைக்குப் பிறகு வங்கி குழுமத்தின் தரவு அலுவலகத்தின் தலைவர் மெக்டோனால்ட் செவ்வாய்க்கிழமை அன்று ஓசிபிசி சாட்ஜிபிடி தளத்தை அறிமுகப்படுத்தினார்.
ஊழியர்களின் கேள்விக்கு உடனுக்குடன் அது பதிலளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாஃப்ட் அஸுர் இதனை உருவாக்கியிருக்கிறது. உலகம் முழுவதும் 420 கிளைகள் மற்றும் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆய்வு மற்றும் யோசனைகளைப் பெற புதிய தளம் உதவும் என்று மைக்ரோசாஃப்ட் அஸுர் தெரிவித்தது.
சோதனையின்போது சுமார் ஆயிரம் ஊழியர்கள், தகவல்களை சரிபார்ப்பது உள்ளிட்ட பணிகளை பாதி நேரத்தில் முடித்துள்ளனர்.
உலகிலேயே தங்களுக்கென சாட்ஜிபிடி போன்ற தளத்தை உருவாக்கிய வங்கிகளில் 91 ஆண்டுகள் பழமையான ஓசிபிசி வங்கியும் ஒன்று. இதற்கு முன்பு அமெரிக்க வங்கியான ஜேபி மோர்கன் இத்தகைய தளத்தை உருவாக்கியிருக்கிறது.


