நிறைவடையும் ஆகப் பழைய எம்ஆர்டி பாதை புதுப்பிப்புத் திட்டம்

2 mins read
d16e3cf9-f0e3-4318-82eb-737c30ac29c0
புதன்கிழமையன்று பீஷான் பெருவிரைவு ரயில் முனையத்துக்குச் சென்ற தற்காலிக போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட். - படம்: சாவ்பாவ்
multi-img1 of 2

‌சிங்கப்பூரின் ஆகப் பழைய பெருவிரைவு ரயில் பாதைகளைப் புதுப்பிப்பதற்கான $2.5 பில்லியன் மதிப்பிலான திட்டம் இவ்வாண்டு இறுதிக்குள் நிறைவடையவுள்ளது.

வடக்கு-கிழக்கு, கிழக்கு-மேற்கு பெருவிரைவு ரயில் பாதைகளுக்கான புதுப்பிப்புப் பணிகள் வரும் டிசம்பர் மாதத்துக்குள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பாதைகளின் ஆறு முக்கிய இயக்க முறைகளில் நான்கு மேம்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் மின்சார சமிக்ஞை முறை (டிராக் சர்க்கிட் சிஸ்டம்) டிசம்பர் மாதத்துக்குள் முழுமையாக மாற்றப்படும்.

106 புதிய ரயில்கள் தருவிக்கப்பட்டன. அவற்றில் ஏழு ரயில்கள் தற்போது இயங்கிக்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவை 2026ஆம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும்.

அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த பின்னர் மிகவும் சுமுகமான ரயில் பயணங்களைப் பயணிகள் எதிர்பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு-கிழக்கு, கிழக்கு-மேற்கு பாதைகளின் மொத்த நீளம் 100 கிலோமீட்டருக்கும் அதிகம். ஆக அதிக எண்ணிக்கையில் மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் அவை ரயில் சேவை வழங்குகின்றன.

ஆண்டுதோறும் அந்தப் பாதைகளில் ரயில்கள் சுமார் 20 மில்லியன் ரயில்-கிலோமீட்டர் (டிரெய்ன்-கிலோமீட்டர்) தூரதம் செல்கின்றன.

புதுப்பிப்புப் பணிகளில் ஈடுபட்ட அனைவரையும் தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் பாராட்டிப் பேசினார். புதன்கிழமை காலை பீ‌ஷான் ரயில் முனையத்துக்குச் சென்ற அவர் தமது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டார்.

1988ஆம் ஆண்டிலிருந்து எஸ்எம்ஆர்டி நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றும் திரு கி‌ருஷ்ணசாமி கோட்டாராஜு என்ற ஊழியரை திரு சீ குறிப்பிட்டுப் பேசினார். துணை மேம்பாட்டுப் பொறியாளராகப் பணியைத் தொடங்கிய திரு கி‌ருஷ்ணசாமி, படிப்படியாக வளர்ந்து மின்னியக்கப் பொறியாளராக (பவர் சப்ளை எஞ்சினியர்) உருவெடுத்ததை அவர் சுட்டினார்.

வாழ்நாள் கற்றல் வாயிலாக தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு திரு கிருஷ்ணசாமி, தனது திறன்களை வளர்த்துக்கொண்டதை திரு சீ குறிப்பிட்டார். அதன் மூலம் நவீன ரயில் பணிகளை மேற்கொள்ளும் குழுவிற்கு அவர் மாறிக்கொண்டார் என்றும் திரு சீ தெரிவித்தார்.

திரு கிரி‌ஷ்ணசாமி கோத்தராஜு போல் புதுப்பிப்புப் பணிகளில் ஈடுபட்ட மேலும் சில ஊழியர்களையும் அமைச்சர் குறிப்பிட்டுப் பேசி தமது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்