ஐரோப்பா செல்லும் சிங்கப்பூரருக்கு புதிய பயண அனுமதி 2025 வரை தேவையில்லை

2 mins read
8a39a59e-d2ab-4bd1-a450-0e63864335e4
ஷென்ஜென் பகுதியில் பெல்ஜியம், ஐஸ்லாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட 27 நாடுகள் உள்ளன. - படம்: ராய்ட்டர்ஸ் 

ஐரோப்பாவுக்குச் செல்லும் சிங்கப்பூரர்கள் ஐரோப்பிய பயணத் தகவல் அங்கீகார ஏற்பாட்டு நுழைவு (இட்டியாஸ்) அனுமதியைப்பெற வேண்டிய தேவை 2025 வரை இருக்காது. அந்த ஏற்பாடு தாமதமாக நடைமுறைக்கு வரும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்து இருக்கிறது.

அமெரிக்கா, பயண அங்கீகாரத்திற்கான மின்னணு ஏற்பாட்டு முறையை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. அதைப் பின்பற்றி ஐரோப்பிய ஒன்றியமும் புதிய முறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேராத பயணிகள் இப்போது விசா இல்லாமல் ஐரோப்பா செல்லும்போது அந்த ஏற்பாட்டின்படி முன்னதாகவே அவர்கள் பரிசோதிக்கப்பட்டுவிடுவார்கள்.

18 முதல் 70 வரை வயதுள்ள பயணிகள் அந்த அனுமதிக்காக S$10 செலுத்த வேண்டி இருக்கும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பயண அனுமதி ஏற்பாடு 2024 முதல் தொடங்கும் என்று கடந்த ஜூலை மாதம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்து இருந்தது.

ஆனால், அந்த முறை 2025 வரை ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் உறுதிப்படுத்தி இருக்கிறது.

ஐரோப்பாவில் இருக்கக்கூடிய 30 நாடுகளுக்குச் செல்வோர் 2025 முதல் இட்டியாஸ் அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டி இருக்கும்.

அந்த நாடுகள் எல்லையைப் பகிர்ந்துகொள்ளக்கூடிய ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகளாகும். அவை ஷென்ஜென் என்ற உடன்பாட்டில் கையெழுத்திட்டு இருக்கின்றன.

அந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டு உள்ள நாடுகளுக்கு இடையில் தாராளமாக சென்று வரலாம்.இந்த நாடுகளுக்கு இடையே பயணிப்போருக்கு சுங்கத்துறை சார்ந்த கட்டுப்பாடுகளோ, கடவுச்சீட்டுகளோ (பாஸ்போர்ட்) தேவையில்லை.

ஷென்ஜென் வட்டாரத்தில் இப்போது 27 நாடுகள் இருக்கின்றன. பெல்ஜியம், ஐஸ்லாந்து, நெதர்லாந்து போன்றவை அவற்றில் அடங்கும். பிரிட்டன் அந்த ஏற்பாட்டில் இல்லை.

பல்கேரியா, சைப்ரஸ், ருமேனியா உள்ளிட்ட ஷென்ஜென் பகுதியைச் சேராத நாடுகளும் இட்டியாஸ் ஏற்பாட்டை நடைமுறைப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்