தனியார் வீட்டு விலைகள், இவ்வாண்டின் 3வது காலாண்டில் 0.8 விழுக்காடு மீட்சி அடைந்துள்ளது. இருந்தாலும் வீடுகளின் விற்பனை குறைந்ததால் விலை உயர்வு கட்டுக்குள் இருந்தது. சொத்து மேம்பாட்டாளர்கள் புதிய வீடுகளை விற்பனைக்கு வெளியிட்டதால் மறுவிற்பனை வீடுகள் தேக்கமடைந்தன.
முந்தைய காலாண்டில் தனியார் வீட்டு விலைகள் 0.2 விழுக்காடு குறைந்து தற்போது மீண்டிருந்தாலும் தொடர்ந்து இரண்டாவது காலாண்டாக வளர்ச்சி ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாக உள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் 2.1 விழுக்காடு காலாண்டு சராசரி வளர்ச்சியோடு ஒப்பிட்டாலும் 3வது காலாண்டில் வளர்ச்சி குறைவாகவே உள்ளது என்று சொத்து நிறுவனமான ஆரஞ்சுடீ அண்ட் டை தெரிவித்தது.
அந்த நிறுவனத்தின் பகுப்பாய்வு, ஆய்வுப் பிரிவின் மூத்த உதவி தலைவரான கிறிஸ்டைன் சன், ஆண்டு அடிப்படையில் ஒட்டுமொத்த விற்பனை 2022ஆம் ஆண்டின் 3வது காலாண்டின் 6,148 வீடுகளிலிருந்து ஒட்டுமொத்த விற்பனை 15.4 விழுக்காடு சரிந்துள்ளது என்று கூறியுள்ளார்.
அதிக, நீண்டகால வட்டி விகித உயர்வு, மெதுவடையும் பொருளியல் வளர்ச்சி, புவிஅரசியல் பதற்றம் காரணமாக வீடு வாங்குபவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டதாக அவர் கூறினார்.
3வது காலாண்டில் புதிய வீடுகள் விற்பனைக்கு வந்ததால் மக்களின் தேவை திசைமாறியது. மறுவிற்பனை வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளில் மக்கள் கவனம் செலுத்தினர்.
இரண்டாவது காலாண்டில் விற்கப்பட்ட 2,976 வீடுகளுடன் ஒப்பிட்டால் 3வது காலாண்டில் 2.6% குறைந்து 2,900 வீடுகள் விற்கப்பட்டன.
கிராண்ட் டன்மன், லெண்டர் ஹில் ரெசிடன்சஸ், அல்டுரா இசி, ஆர்ச்சர்ட் சோஃபியா, பைன்டீரி ஹில், த ஆர்டன், த லேக்கார்டன் ரெசிடென்சஸ், த மிஸ்ட், த ஷோர்பிரண்ட், டிஎம்டபிள்யு மேக்ஸ்வெல் உள்ளிட்ட புதிய வீடுகள் விற்பனைக்கு வெளியிடப்பட்டன.