மக்களை ஈடுபடுத்தி அரசாங்கம் செயல்படும்: துணைப் பிரதமர் வோங்

மக்களை ஈடுபடுத்தி அரசாங்கம் செயல்படும்: துணைப் பிரதமர் வோங்

2 mins read
f9d91f10-b3d0-44aa-a831-4983ebd7400b
துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் முன்னேற்றத்துக்கான திட்டங்களை வெளியிட்ட துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், அரசாங்கம் தன்னிச்சையாகச் செயல்படாமல் மக்களுடன் சேர்ந்து, அவர்களை ஈடுபடுத்திச் செயல்படும் என்று உறுதியளித்தார்.

முன்னேறும் சிங்கப்பூர் திட்ட அறிக்கை குறித்த செய்தியாளர் கூட்டத்தில் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், தற்போது நாம் செயல்படும் முறைக்கும் எதிர்கால செயல்பாட்டு முறைகளுக்கும் பெரும் மாற்றமாக இதைக் காண்பதாக அவர் கூறினார்.

“மக்களை ஈடுபடுத்தும் கலந்துரையாடல் என்பதற்கும் மேலாக, இது ஒரு பங்காளித்துவ முயற்சி. அரசாங்கம், மக்கள், சமூகக் குழுக்கள், முதலாளிகள், வணிகங்களுக்கு இடையிலான முத்தரப்புக் கூட்டணியை உள்ளடக்கியது,” என்று முன்னேறும் சிங்கப்பூர் திட்ட அறிக்கையை வெளியிட்டுப் பேசிய திரு வோங் கூறினார். வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அந்த 180 பக்க முன்னேறும் சிங்கப்பூர் திட்ட அறிக்கை சுமார் 16 மாத கால உரையாடலின் தொகுப்பாகும்.

கூடுதல் நிதியுதவி வசதி குறைந்தவர்கள், பணியிடைக்கால ஊழியர்கள், முதியவர்கள் போன்றவர்களுக்கு கூடுதல் நிதியாதரவு, மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு போன்ற வழிகளில் அதிக உதவி வழங்க அறிக்கை கேட்டுக்கொண்டுள்ளது.

ஒருவர் மீது மற்றவர் அக்கறை காட்டும் கூட்டுப் பொறுப்புணர்வு, வெற்றி குறித்த பரந்த விளக்கம் போன்ற நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்ட சிங்கப்பூருக்குத் தேவையான மனப்போக்கு மாற்றங்களையும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களுக்கும் நான்காம் தலைமுறைக் குழு எந்த அடிப்படையில் முன்னுரிமை அளிக்கும் என்பது குறித்து திரு வோங் விளக்கினார்.

கொள்கை மாற்றங்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள வீட்டு வசதி, ஓய்வூதியம் போன்ற சிங்கப்பூரர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, அதிக அக்கறைக்குரிய பிரச்சினைகளுக்கு குழு முன்னுரிமை கொடுக்கும் என்றார் அவர்.

மக்களின் தேவைகள், சிங்கப்பூரர்களின் கவலைகள், மாற்றங்களை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தத் தேவைப்படும் காலம் ஆகியவற்றின் அடிப்படையில் இவை செயல்படுத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.

ஆண்டிறுதிக்குள் மேலும் இரு திட்டங்கள் குறித்து விளக்கப்படும். ஒன்று, நலமாக மூப்படைய உதவும் தேசிய திட்டமான ‘நலமாக மூப்படைதல்’ எஸ்ஜி செயல்திட்டம். மற்றது விருப்பமின்றி வேலையில்லாமல் இருப்போருக்கான ஆதரவுத் திட்டம். இதுகுறித்து 2024 வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்படும் என்றார் திரு வோங்.

பல இடையூறுகள் சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் ஒரு கட்டத்தில் சிங்கப்பூர் நுழைவதால், சிங்கப்பூரர்களுக்காக அரசாங்கம் இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும். கூடுதல் உத்தரவாதங்களை வழங்க வேண்டும் என்று துணைப் பிரதமர் கூறினார்.

இதற்கு அதிக வளங்கள் தேவைப்படும் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

நான்காம் தலைமுறைக் குழு, அரசாங்கம், சிங்கப்பூர் ஆகியவை ஒன்றிணைந்து செயல்பட முழு திட்டம் உள்ளது என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்