தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீவு முழுவதும் ஹாலோவீன் கொண்டாட்டம்; விற்பனை கூடியது

2 mins read
8c73ca1f-1d31-4b99-8a3a-65f25f10152c
சனிக்கிழமை ஹவ் பார் வில்லாவில் நடைபெற்ற ஹாலோவீன் நிகழ்ச்சியில் நடிகை ஒருவர் பேய் போல வேடமிட்டிருந்தார். - படம்: இபிஏ

சிங்கப்பூரில் ஹாலோவீன் கொண்டாட்ட உணர்வு தீவு முழுவதும் பரவுகிறது. அதனால், ஹாலோவீன் தொடர்பான பொருள்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

வித்தியாசமான கொண்டாட்டத்தின்மீது ஆர்வம் பெருகி வருவதால் ஹாலோவீன் நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகளும் பொருள்களின் விற்பனையும் கூடியுள்ளது என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் ஆடை விற்பனையாளர்களும் தெரிவித்துள்ளனர்.

ஜேர்னிஸ் என்ற பயண நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சவிதா காஷ்யப், இளம் சிங்கப்பூரர்களிடையே ஹாலோவின் ஆர்வம் பெருகி வருகிறது என்றார்.

இளம் வயதிலிருந்தே மேற்கத்திய ஊடகங்களால் அவர்கள் அதிகம் ஈர்க்கப்படுகின்றனர் என்றார் அவர்.

ஜேர்னிஸ், பாரம்பரிய சுற்றுப் பயணங்களை ஏற்பாடு செய்வதில் அனுபவமுள்ள நிறுவனம்.

இம்மாதம் 27ஆம் தேதியிலிருந்து 29ஆம் தேதி வரை ஹவ் பார் வில்லாவில் அது ஹாலோவீன் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகளின் விற்பனை 2022ஆம் ஆண்டைவிட 130 விழுக்காடு கூடியுள்ளது.

இதற்கிடையே சிங்கப்பூர் யுனிவர்சல் ஸ்டுடியோவின் வருடாந்தர ஹாலோவீன் பயங்கர இரவு நிகழ்ச்சி, கொள்ளைநோய்க்கு முந்திய நிலைக்குத் திரும்பி இடமில்லாமல் தீர்ந்துவிட்டது என்று ரிசார்ட்ஸ் வோர்ல்டு செந்தோசாவின் மூத்த உதவி தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சாங் சீ பெய் தெரிவித்தார்.

திரு சாங், எண்ணிக்கை விவரங்களை வெளியிடவில்லை.

ஆனால் தொற்றுநோய்க்குப் பிறகு எல்லை தாண்டிய பயணங்கள் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.

சிங்கப்பூரின் குடியிருப்புப் பகுதிகளில் நடைபெறும் ஹாலோவீன் நிகழ்ச்சிகளிலும் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்கின்றனர். பூசணிக்காயில் பல்வேறு உருவங்களை செதுக்கி, வடிவமைத்து, பயங்கர தோற்றத்துடன் அவர்கள் வருகின்றனர்.

ஆங்கர்பாய்ண்ட் கடைத்தொகுதியில் அக்டோபர் 21, 22 தேதிகளில் நடைபெற்ற ஹாலோவீன் நிகழ்ச்சி, ஏறக்குறைய 2,000 பேரை ஈர்த்திருந்தது.

“தீவு முழுவதுமிருந்து மக்கள் வந்தனர். சிலர் ‘சூப்பர்ஹீரோ’ போல ஹாரி பாட்டர் உள்ளிட்ட உடைகளை அணிந்து வந்தனர் என்று ஆங்கர்பாய்ண்ட் குத்தகை நிர்வாகி தெரிவித்தார்.

குவீன்ஸ்டவுன் கடைத்தொகுதி, இவ்வாரம் 28, 29 தேதிகளில் ஏற்பாடு செய்துள்ள ஹாலோவீன் நிகழ்ச்சிக்கு ஏராளமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீ சூன், சிக்லாப் உள்ளிட்ட குடியிருப்புப் பேட்டைகளும் வார இறுதிக் கொண்டாட்டங்களில் இணைகின்றன.

குறிப்புச் சொற்கள்