சீனாவின் முன்னாள் பிரதமர் லி கிசியாங் மாரடைப்பு காரணமாக தனது 68வது வயதில் வெள்ளிக்கிழமை காலமானார்.
அவருக்கு அனுதாபம் தெரிவித்து இப்போதைய சீனப் பிரதமர் லி சியாங்கிற்கு சிங்கப்பூரின் பிரதமர் லீ சியன் லூங் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
சனிக்கிழமை தேதியிடப்பட்டு இருக்கும் அந்தக் கடிதத்தில் சிங்கப்பூர் அரசாங்கம் சார்பில் தனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக திரு லீ குறிப்பிட்டு இருக்கிறார்.
மாபெரும் அர்ப்பணிப்புடன் தன் நாட்டிற்கு சேவையாற்றிய ஒரு தலைவர் என்று சீனாவின் முன்னாள் பிரதமர் லி கிசியாங்கை திரு லீ பாராட்டினார்.
திரு லி கிசியாங்கின் தலைமைத்துவத்தின்கீழ் சீனா பல சவால்களைச் சமாளித்து இருக்கிறது என்று பிரதமர் லீ கூறினார்.
சீனாவின் ஷென்யாங் நகரில் 2005ல் முதல் முறையாக தான் லி கிசியாங்கைச் சந்தித்ததை திரு லீ நினைவுகூர்ந்தார்.
லி கிசியாங் சீனாவின் பிரதமராக இருந்தபோது சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையில் முக்கியமான பல இரு தரப்பு சாதனைகள் நிகழ்த்தப்பட்டதாகவும் திரு லீ தெரிவித்தார்.

