தேசிய சிறுநீரக அறநிறுவனம் 2025க்குள் ஐந்து புதிய ரத்த சுத்திகரிப்பு நிலையங்களைத் திறக்கும். சிறுநீரகச் செயலிழப்புச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் வேளையில், புதிய நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.
சிங்கப்பூர் முழுவதும் தற்போது இயங்கிவரும் 41 ரத்த சுத்திகரிப்பு நிலையங்கள் கிட்டத்தட்ட 90 விழுக்காடு ஆற்றலில் செயல்படுவதாக அறநிறுவனத்தின் தலைமை நிர்வாகி திம் வீ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
ரத்த சுத்திகரிப்புக்காக அறநிறுவனத்துக்கு ஒவ்வொரு மாதமும் 100க்கும் மேற்பட்ட புதிய விண்ணப்பங்கள் கிடைப்பதாக திரு வீ தெரிவித்தார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த எண்ணிக்கை பாதியாக இருந்தது. அப்போது 36 ரத்த சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டன.
சிங்கப்பூரில் ஒவ்வொரு நாளும் ஆறு பேரிடம் சிறுநீரகச் செயலிழப்பு கண்டறியப்படுகிறது. சிறுநீரகங்கள் ஒழுங்காகச் செயல்படாதபோது ரத்தத்திலிருந்து கழிவுப் பொருள்களையும் உபரி திரவங்களையும் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை நீக்குகிறது. ரத்த சுத்திகரிப்பு அல்லது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படாவிட்டால் நோயாளிகள் ஒரு கட்டத்தில் உயிரிழந்துவிடுவர்.
வரும் ஜனவரியில் ஸ்கை விஸ்தா@புக்கிட் பாத்தோக்கில் ரத்த சுத்திகரிப்பு நிலையத்தை அறநிறுவனம் திறக்கும்.
அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள், செங்காங் சமூக மருத்துவமனையில் மற்றொரு நிலையம் திறக்கப்படும். சமூக மருத்துவமனை ஒன்றில் அமையவிருக்கும் இரண்டாவது ரத்த சுத்திகரிப்பு நிலையமாக இது இருக்கும்.
பிடாடாரி, ஃபெர்ன்வேல், பொங்கோல் ஆகிய வீடமைப்பு வளர்ச்சிக் கழக பேட்டைகளில் 2025க்குள் மேலும் மூன்று ரத்த சுத்திகரிப்பு நிலையங்கள் திறக்கப்படும்.
ஒவ்வொரு ரத்த சுத்திகரிப்பு நிலையத்திலும் சராசரியாக 22 சாதனங்கள் உள்ளன. வாரத்திற்கு 132 நோயாளிகள் வரை அவற்றில் சிகிச்சை பெறலாம்.
தொடர்புடைய செய்திகள்
புதிய நிலையங்களைத் திறப்பதால் மட்டும் தேவைக்குத் தீர்வு கண்டுவிட இயலாது. இருபது ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக இயங்கிவரும் குறைந்தது எட்டு நிலையங்கள் 2030க்குள் புதுப்பிக்கப்படும் என்று அறநிறுவனம் முன்னதாகக் கூறியிருந்தது.
தரைப் பரப்பளவை விரிவுபடுத்துவது புதுப்பிப்புப் பணிகளில் அடங்கும் என்று திரு வீ கூறினார்.

