காஸாவில் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தம் இடம்பெற வேண்டும் என்று கோரும் ஐநா தீர்மானத்திற்கு சிங்கப்பூர் ஆதரவு அளித்தது.
அதன்மூலம் காஸாவின் மோசமான சூழ்நிலை தொடர்பான தன்னுடைய கவலையை சிங்கப்பூர் வெளிப்படுத்தியது.
இஸ்ரேல்-ஹமாஸ் பிரச்சினையில் தெள்ளத் தெளிவான நிலையை சிங்கப்பூர் எடுத்து இருக்கிறது.
சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம், ஞாயிற்றுக்கிழமை இவ்வாறு தெரிவித்தார்.
காஸா மக்களுக்காக மருத்துவ நிவாரணப் பொருள்களைத் திரட்டுவதற்காக ‘ஹியுமேனிட்டி மேட்டர்ஸ்’ என்ற லாபநோக்கற்ற அமைப்பு ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்துகொண்டார்.
ஐநா பொதுப் பேரவையின் அவசர சிறப்புக் கூட்டத்தில் அரபு நாடுகள் தாக்கல் செய்த நகல் தீர்மானத்திற்கு ஆதரவாக சிங்கப்பூர் வாக்களித்தது.
அந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 121 வாக்குகள் கிடைத்தன. அதை எதிர்த்து 14 வாக்குகள் போடப்பட்டன. 44 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
‘குடிமக்களின் பாதுகாப்பையும் சட்ட, மனிதாபிமான கடமைகளையும் நிறைவேற்றுவது’ என்ற அந்தத் தீர்மானம் விரோதப் போக்குகளை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்ததாக திரு சண்முகம் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
காஸாவில் குடிமக்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசியப் பொருள்கள் உடனடியாகத் தடையில்லாமல் கிடைக்க வேண்டும்.
காஸா பகுதியில் இருந்து பாலஸ்தீனர்கள் வெளியேற வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவுகளை இஸ்ரேல் மீட்டுக்கொள்ள வேண்டும் என்று அந்தத் தீர்மானம் கேட்டுக்கொண்டது.
பாலஸ்தீனர்களைப் பலவந்தமாக இடமாற்றுவதை தீர்மானம் நிராகரித்துவிட்டது.
அந்தப் பிரச்சினைக்கு அமைதியான முறையில் காணப்படும் இருநாட்டுத் தீர்வே இறுதியான தீர்வு என்பதை அந்தத் தீர்மானம் மறுஉறுதிப்படுத்தியது.
அந்தப் பிரச்சினை தொடர்பான சிங்கப்பூரின் நிலை என்ன என்பதை சில நாள்களுக்கு முன் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெள்ளத்தெளிவாகக் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கடைப்பிடித்து வரும் அந்த நிலை ஐநா நிறைவேற்றி இருக்கும் தீர்மானத்துடன் ஒத்ததாக இருக்கிறது என்பதை அமைச்சர் சண்முகம் சுட்டிக்காட்டினார்.
அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக சிங்கப்பூர் வாக்களித்த அதேவேளையில், அந்தத் தீர்மானம் பரந்த அளவில் முழு அம்சங்களையும் உள்ளடக்கியதாகக் கருதப்படவில்லை.
அந்தத் தீர்மானம் சுட்டிக்காட்டி இருக்க வேண்டிய இரண்டு அம்சங்கள் இருக்கின்றன.
அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ், இஸ்ரேல் மீது நடத்திய பயங்கரவாதத் தாக்குதலை இன்னமும் நாம் கண்டிக்க வேண்டும். அதை நியாயப்படுத்த முடியாது.
தன்னைத் தற்காத்துக்கொள்ள இஸ்ரேலுக்கு உள்ள உரிமையையும் நாம் ஏற்க வேண்டும்.
இருந்தாலும் அத்தகைய சுயதற்காப்பு உரிமை கண்டபடி குடிமக்களைக் கொலை செய்வதை உள்ளடக்கக் கூடியதாக இருக்கக்கூடாது.
அனைத்துலக சட்டங்களுக்கு ஏற்ப அந்த உரிமையை இஸ்ரேல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று திரு சண்முகம் கூறினார்.
பொது ஒழுங்கு காரணங்களுக்காக இஸ்ரேல்-ஹமாஸ் பிரச்சினை தொடர்பில் சிங்கப்பூரில் பொதுக்கூட்டங்களை நடத்த அதிகாரிகள் மறுத்துவிட்டது ஏன் என்பது பற்றி அமைச்சர் கருத்துக் கூறினார்.
ஒருதரப்புக்கு அனுமதி அளித்தால் மறுதரப்புகளுக்கும் அனுமதி அளிக்க வேண்டி இருக்கும் என்பதை அப்போது அவர் சுட்டினார்.
இணையத்தில் இடம்பெறக்கூடிய கருத்துகளைப் பொறுத்தவரை, அத்தகைய கருத்துகள் இதர சமயங்கள், இனங்களுக்கு எதிராக ஆயுதங்களைத் தூக்கும்படி, கெட்ட செய்கைகளைச் செய்யும்படி, வன்செயலைத் தூண்டிவிடும்படி, விரோதப் பேச்சை ஊக்குவிக்கும்படி மக்களைக் கேட்டுக்கொள்ளக் கூடாது.
மற்றபடி கருத்துகளைத் தெரிவிக்க மக்களுக்கு உரிமை உண்டு என்று திரு சண்முகம் தெரிவித்தார்.
அமைச்சர் சண்முகம், சனிக்கிழமை 200க்கும் மேற்பட்ட மலாய்/முஸ்லிம் சமூகத் தலைவர்களுடன் மூன்று மணி நேரம் பிரத்தியேகக் கூட்டத்தை நடத்தி, அரசாங்கத்தின் நிலையை அந்தத் தலைவர்களுக்கு விளக்கினார்.
இஸ்ரேல்-ஹமாஸ் சூழ்நிலை, சிங்கப்பூர் அரசாங்கத்தின் நிலை ஆகியவை பற்றி தவறான தகவல்களும் பொய்த் தகவல்களும் ஏராளமாக இடம்பெற்று உள்ளன என்பதை திரு சண்முகம் சுட்டிக்காட்டினார்.
இஸ்ரேல், பாலஸ்தீன பிரச்சினைக்கு இரண்டு நாட்டுத் தீர்வைப் பொறுத்தவரை, சிங்கப்பூர் இஸ்ரேலியர்களின் சட்டவிரோத குடியிருப்புகளுக்கு எதிராக வாக்களித்து இருக்கிறது. அந்தச் செயல் அனைத்துலக சட்டத்திற்கு முரணானது என்று சிங்கப்பூர் கூறி இருக்கிறது.
இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலம் இருப்பதை எதிர்த்து சிங்கப்பூர் வாக்களித்து இருக்கிறது.
அதேநேரத்தில், தன்னை தற்காத்துக்கொள்வதற்கு இஸ்ரேலுக்கு உள்ள உரிமையை எப்போதுமே சிங்கப்பூர் ஆதரித்து வந்திருக்கிறது என்று அமைச்சர் சண்முகம் தெரிவித்தார
அரசாங்கம் மத்திய கிழக்கு சூழ்நிலையையும் தன்னுடைய நிலையையும் சிங்கப்பூர் சமூகம் முழுவதற்கும் விளக்க முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் திரு சண்முகம் கூறினார்.
ஹியுமேனிட்டி மேட்டர்ஸ் அமைப்பு 100 தொண்டூழியர்களைக் கொண்டு $215,000 மதிப்புள்ள மருத்துவ நிவாரணப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை தயார்ப்படுத்தியது.
அடுத்த வாரம் நான்கு தொண்டூழியர்கள் தெற்கு காஸாவில் உள்ள ராஃபா நகருக்கு எட்டு டன் உதவிப்பொருள்களை எடுத்துச் செல்வார்கள்.

