இருதரப்பு விவகாரங்கள் தொடர்பில் தீர்வுகாண சிங்கப்பூர், மலேசியா உறுதி

இருதரப்பு விவகாரங்கள் தொடர்பில் தீர்வுகாண சிங்கப்பூர், மலேசியா உறுதி

2 mins read
b2529a86-a437-41d6-a763-6ab26ddac781
அதிபர் மாளிகையில் அக்டோபர் 30ஆம் தேதியன்று நடைபெற்ற சந்திப்பில் பிரதமர் லீ சியன் லூங்குடன் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தீர்வுகாணாமல் உள்ள இருதரப்பு விவகாரங்களைக் கையாள சிங்கப்பூரும் மலேசியாவும் இணைந்து பணியாற்றும் என்று பிரதமர் லீ சியன் லூங் திங்கட்கிழமையன்று தெரிவித்தார்.

இத்தகைய விவகாரங்களைத் தீர்த்துவைப்பதால் இரு நாடுகளுக்கும் பலன் உண்டு என்று தாமும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் தங்களின் நாட்டு மக்களுக்குப் புரியவைத்து அரசாங்க ரீதியான நம்பிக்கையைப் பெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் லீயின் அழைப்பில் 10வது சிங்கப்பூர்-மலேசியத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சிங்கப்பூர் வந்துள்ள திரு அன்வாருடன் கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தில் திரு லீ இவ்வாறு பேசினார்.

விவகாரங்கள் முன்பு கையாளப்பட்ட விதத்தைக் காட்டிலும் தற்போது அவற்றுக்கான தீர்வுகள் வழக்கத்துக்கு மாறாக அமையலாம் என்றார் பிரதமர் லீ. இருப்பினும், நீடித்த காலத்துக்கான கண்ணோட்டத்துடன் பிரச்சினையை அணுகி, இருநாட்டு கவலைகளையும் போக்கும் வகையிலும் பலன் தரும் வகையிலும் தீர்வு காணலாம் என்றார் அவர்.

கடல்துறை எல்லை நிர்ணயம், பெட்ரா பிரங்காவில் நிலமீட்புப் பணிகள், தண்ணீர், வான்வெளி போன்ற விவகாரங்களுக்குத் தீர்வுகாண்பது என்பது அவ்வளவு எளிதல்ல. அதற்கு இருதரப்புக்கும் இடையே நம்பிக்கை நிலவ வேண்டும்.

திரு அன்வாரும் திரு லீயும் ஒருவரை ஒருவர் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அறிந்திருக்கும் நிலையில், தீர்வுகாணும் வாய்ப்பு தங்களுக்கு அமைந்துள்ளதாக பிரதமர் லீ குறிப்பிட்டார்.

தீர்வு காணப்படாத விவகாரங்கள் அனைத்தும் முக்கியம் என்றாலும் அவை முழுமையான, ஆக்கப்பூர்வமான முறையில் அணுகப்படும் என்று திரு லீ வலியுறுத்தினார்.

“முக்கியமாக, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ஒட்டுமொத்த உறவைப் பாதிக்கும் வகையிலோ பல அம்சங்களில் எங்களுக்கு இடையே ஏற்பட்டு வரும் ஒத்துழைப்பிலிருந்து அகலும் வகையிலோ இந்த விவகாரங்கள் அமைந்துவிடக்கூடாது,” என்றார் அவர்.

இருதரப்பு விவகாரங்கள் எவ்வளவு விரைவாகத் தீர்க்கப்படும் என்பது குறித்து கேட்கப்பட்டபோது திரு லீ, “எது விரைவு, எது மெதுவாக நடக்கிறது என்று நான் சொல்லமாட்டேன். நாங்கள் இருவரும் ஒரே உறுதியுடன் இருப்பதால் ஒவ்வொன்றும் சீக்கிரம் முடியும்படி இருக்கும் என்று நினைக்கிறேன்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்