காஸா தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் யுஎஸ்$200,000 (273,500 சிங்கப்பூர் வெள்ளி) மதிப்பிலான நிவாரணப் பொருள்களை போர்ப் பகுதிக்கு அனுப்பவுள்ளது.
சுகாதாரக் கருவிகள், சுத்தமான குடிநீர், உணவுப் பொருள்கள், உட்கொள்ளக்கூடிய மருத்துவப் பொளுள்கள், சக்கர நாற்காலிகள் போன்றவை நிவாரணப் பொருள்களில் இருக்கும் என்று சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் செவ்வாய்க்கிழமை கூறியது.
காஸாவில் உடனடி மற்றும் முக்கியமான தேவைகளைக் கண்டறிந்து, வரும் நாட்களில் நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு வசதியாக எகிப்திய செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்காக கெய்ரோவுக்கு ஓர் ஊழியரையும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் அனுப்பியுள்ளது.
எகிப்துக்கும் காஸா பகுதிக்கும் இடையே உள்ள ஒரே பாதையான ரஃபா எல்லை வழியாக காஸாவிற்கு மனிதாபிமான உதவிகளை ஒருங்கிணைக்க சிங்கப்பூர், எகிப்திய செஞ்சிலுவைச் சங்கங்கள் நெருக்கமாகச் செயல்படுகின்றன.
அத்துடன், அதிகமான மனிதாபிமான உதவிகளை காஸாவுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளையும் அவை அதிகரித்து வருவதாக அறிக்கை குறிப்பிட்டது.
உணவு, தண்ணீர், மருத்துவப் பொருள்கள் எகிப்திய எல்லை வழியாக வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், வழங்கப்படும் உதவிகள் மிகக் குறைவாகவே உள்ளதாகவும் அங்கு தேவை மிக அதிகமாக இருப்பதாகவும் அது கூறியது.
காஸா பகுதியில் பாதிக்கப்பட்ட சமூகங்கள் குறைந்தளவிலான மனிதாபிமான உதவிகளையே பெற்றுள்ளதாகவும்; பாலஸ்தீன சிவப்பு பிறைச் சங்கம், ஆம்புலன்ஸ், சுகாதார சேவைகள் போன்ற அவசர உதவிகளை வழங்குவதற்கு மிகவும் சவாலான சூழ்நிலையில் செயல்பட்டு வருவதாகவும் செஞ்சிலுவைச் சங்க அறிக்கை கூறியது.

