‘வாலபி’ ராணுவப் பயிற்சிக்காக கடந்த மாதம் ஆஸ்திரேலியா சென்றுவந்த இளம் ராணுவ வீரரான 20 வயது ‘சிஎஃப்சி’ சுஜித் சித்தம்செட்டிக்கு அந்தப் பயற்சி மறக்க முடியாத அனுபவத்தைத் தந்தது.
‘வாலபி’ ராணுவப் பயிற்சியில் துப்பாக்கிக்காரருக்கு உதவியாளராக திரு சுஜித் பணியாற்றினார். துப்பாக்கிக்கான குண்டுகளையும் முக்காலித்தாங்கியையும் எந்நேரமும் தயார்நிலையில் வைத்திருப்பது பயிற்சியின்போது அவருக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பு.
திரு சுஜித் இதற்குமுன் அமெரிக்காவின் ‘லைட்னிங் ஸ்டிரைக்’ பயிற்சியில் பங்கேற்றுள்ளார். சிங்கப்பூர் சுற்றுச்சூழலுக்கு மாறுபட்ட சூழலை எப்படி அமெரிக்க ராணுவப் பயிற்சி அளித்ததோ, அதுபோன்ற அனுபவத்தை ‘வாலபி’ பயிற்சியும் வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
“துப்பாக்கிக்கார்கள், அவர்களின் உதவியாளர்கள், அவர்கள் அனைவரையும் வழிநடத்தும் தளபதி என ஒரு குழுவாக நாங்கள் செயல்பட்டோம்,” என்றார் திரு சுஜித்.
சிங்கப்பூரின் தற்காப்புத் துறை பற்றிய விழிப்புணர்வை இந்நிகழ்வு அதிகரித்திருப்பதாகக் கூறிய திரு சுஜித், இதுபோன்ற பயிற்சிகளில் மேலும் கலந்துகொள்ள ஆர்வத்துடன் இருப்பதாகவும் சொன்னார்.