தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொது மருத்துவமனைகள், பலதுறை மருந்தகங்கள், சுகாதாரப் பராமரிப்புக் குழுமங்களின் இணையத்தளங்கள் முடங்கின

2 mins read
59dae677-f02b-425a-bc49-a00cf00f957e
சிங்கப்பூர் பொது மருத்துவமனை, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை, அலெக்சாண்டிரா, டான் டோக் செங், கூ டெக் புவாட் மருத்துவமனைகளின் இணையத்தளங்களை எட்ட முடியவில்லை. - படம்: எஸ்டி கோப்புப்படம் 

சிங்கப்பூரில் செயல்படும் முக்கியமான அரசாங்க மருத்துவமனைகள், பலதுறை மருந்தகங்கள், சுகாதாரப் பராமரிப்புக் குழுமங்கள் ஆகியவற்றின் இணையத்தளங்களில் புதன்கிழமை காலை கோளாறு ஏற்பட்டுவிட்டது.

புதன்கிழமை முற்பகல் சுமார் 11.30 மணிக்குப் பிறகு அவற்றைப் பயன்படுத்த இயலவில்லை.

பிற்பகல் சுமார் 2.30 மணி நிலவரப்படியும் அந்த இணையத்தளங்கள் பயன்படுத்த இயலாத நிலையிலேயே இருந்தது தெரியவந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.

சிங்கப்பூர் பொது மருத்துவமனை, டான் டோக் செங், நன்யாங் பல்கலைக்கழகம், சாங்கி பொது, கேகே மாதர், சிறார் மருத்துவமனைகளின் இணையத்தளங்களை எட்ட முடியவில்லை.

செங்காங் பொது மருத்துவமனை, கூ டெக் புவாட், இங் டெங் ஃபோங் மருத்துவமனைகள், மனநலக் கழகம் ஆகியவற்றின் இணையத்தளங்கள் செயல்படவில்லை.

மூன்று பொது சுகாதார பராமரிப்புக் குழுமங்களின் இணையத்தளங்களையும் எட்ட முடியவில்லை.

சிங்கப்பூரில், இந்தச் சுகாதாரப் பராமரிப்புக் குழுமங்கள்தான் பொது மருத்துவமனைகள், பலதுறை மருந்தகங்கள் அனைத்தையும் நிர்வகிக்கின்றன.

சிங்ஹெல்த் எனப்படும் சிங்கப்பூர் சுகாதாரச் சேவைகள் நிறுவனம் நாட்டின் வடக்குப் பகுதியில் செயல்படும் மருத்துவமனைகளையும் பலதுறை மருந்தகங்களையும் நிர்வகித்து நடத்துகிறது.

மேற்குப் பகுதியில் உள்ள இத்தகைய நிறுவனங்களை தேசிய பல்கலைக்கழக சுகாதார அமைப்பு நிர்வகிக்கிறது.

மத்தியப் பகுதியில் இருக்கக்கூடிய சிகிச்சை நிலையங்களை தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமம் நிர்வகிக்கிறது.

இருந்தாலும் ஹெல்த்ஹப் நிறுவனத்தின் இணையத்தளமும் தனியார் மருத்துவ நிலையங்களின் இணையத்தளங்களும் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இதனிடையே, இணையத்தளங்களும் மின்னஞ்சல்களும் தேசிய பல்கலைக்கழக சுகாதார அமைப்பின் நேரடித் தொலைபேசி உள்ளிட்ட அனைத்து இணையச் சேவைகளும் கிடைக்கவில்லை என்று சினாப்ஸி என்ற தேசிய சுகாதாரப் பராமரிப்பு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.

இருந்தாலும் பொது மருத்துவமனைகளும் மருந்தகங்களும் நோயாளிகளின் பதிவேடுகளை எட்டி அவற்றை பயன்படுத்த முடிந்ததாகவும் அது கூறியது.

கோளாறுக்கு காரணம் என்ன என்பது பற்றி அது எதையும் தெரிவிக்கவில்லை.

சினாப்ஸி நிறுவனத்தின் இணையத்தளமும் கோளாறாகிவிட்டது. என்றாலும் அது பிற்பகல் சுமார் 2.30 மணிக்கு பழைய நிலைக்குத் திரும்பிவிட்டது.

குறிப்புச் சொற்கள்