சிங்கப்பூரில் புதிய அறிவியல் நிலையம் 2027ஆம் ஆண்டில் திறக்கப்பட உள்ளது. அதில் புதிய காட்சிப்பொருள்கள், இடவசதிகள் இருக்கும்.
அவற்றோடு நிகழ்கால, எதிர்காலச்சவால்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஏற்புடையதாகவும் அது இருக்க வேண்டி இருக்கும் என்று மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் புதன்கிழமை தெரிவித்தார்.
இதைக் கருத்தில் கொண்டு மாணவர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் செயல்திட்டங்களும் பயிலரங்குகளும் அங்கு இடம்பெறும்.
புதிய அறிவியல் நிலையம் சைனிஸ் கார்டன் எம்ஆர்டி நிலையத்திற்குப் பக்கத்தில் அமைந்து இருக்கும். புத்தாக்கத்திற்கான இடவசதிகளும் அங்கு இருக்கும்.
தொழில்நுட்பங்கள், சாதனங்களுடன் கூடிய அனுபவங்களை வருகையாளர்கள் பெறுவதற்கான இடவசதிகளும் அங்கு இருக்கும்.
‘‘அறிவியல் தொழில்நுட்பக் கல்வியில் நீண்டகாலமாகவே சிங்கப்பூர் முக்கியத்துவம் செலுத்தி வருகிறது. தொழில்துறை, உள்கட்டமைப்பு வசதிகள் முதல் சுகாதாரப் பராமரிப்பு, வீடுகள் வரை பல துறைகளிலும் நாடு உருமாற அதன்மூலம் உதவி கிடைத்து இருக்கிறது.
‘‘நம்முடைய வாழ்க்கை வழியையும் நாம் வாழ்கின்ற சுற்றுச்சூழலையும் நல்ல படியாகவோ அல்லது வேறு விதமாகவோ மாற்றக்கூடிய ஆற்றல் அறிவியல் தொழில்நுட்பத்திற்கு இருக்கிறது,’’ என்பதை மூத்த அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஜூரோங் லேக் வட்டாரத்தில் அமையவிருக்கும் புதிய அறிவியல் நிலையம் 2027 இறுதியில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
அறிவியல் நிலையத்தின் 50வது ஆண்டுவிழாவையொட்டி அந்த நிலையம் திறக்கப்படும் வாய்ப்பு உள்ளது. கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு முதல் பாதியில் தொடங்க திட்டங்கள் உள்ளன.
கல்வி அமைச்சர் சான் சுன் சிங், அறிவியல் நிலைய நிர்வாகச் சபையின் தலைவர் திருவாட்டி டான் யென் யென், அறிவியல் நிலைய நிர்வாகச் சபையின் தலைமை நிர்வாகி இணைப் பேராசிரியர் லிம் டிட் மெங் ஆகியோரும் புதன்கிழமை நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
புதிய அறிவியல் நிலையத்துக்கு அவர்கள் அடிக்கல் நாட்டினர்.
அறிவியல் துறை பரிணமித்துக்கொண்டே இருக்கிறது. அதையொட்டி அறிவியல் நிலையமும் பரிணமிக்க வேண்டிய நிலை இருந்து வந்துள்ளது என்று திரு டியோ கூறினார்.
சிங்கப்பூரில் 40 ஆண்டுகளுக்கு முன் அறிவியல் நிலையம் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்ட நிகழ்ச்சியில் அப்போதைய சுகாதார அமைச்சர் டாக்டர் டோ சின் சாய் கலந்துகொண்டு பேசினார்.
‘‘அறிவியல் அப்படியே இருந்துவிட முடியாது. அது புதுப்புது யோசனைகளை உருவாக்க வேண்டும். அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்களை நவீனங்களுடன் சேர்ந்து நிலையமும் பரிணமிக்க வேண்டும்,’’ என்று அப்போது டாக்டர் டோ குறிப்பிட்டு இருந்தார். அதை திரு டியோ நினைவுகூர்ந்தார்.
அறிவியல் நிலையம் முதல் முதலாக 1977ல் திறக்கப்பட்டது. அப்போது அதில் நான்கு காட்சிக் கூடங்கள் இருந்தன. அவற்றில் 322 காட்சிப்பொருள்கள் இடம்பெற்று இருந்தன.
காலவோட்டத்தில் அந்த நிலையம் கணிசமான அளவுக்கு விரிவடைந்தது. அதன் காட்சிப்பொருள்களும் பல முறை புதுப்பொலிவைக் கண்டன என்பதையும் திரு டியோ குறிப்பிட்டார்.

