தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சீனப் புத்தாண்டுக் காலத்தில் மும்மடங்காகும் மலேசியாவுக்கான பயணக் கட்டணம்

2 mins read
04d4bb5c-db20-48b2-ac48-4c3fb8ab17fd
காஸ்வே கடற்பாலம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அடுத்த ஆண்டு சீனப் புத்தாண்டுக் காலத்தில் மலேசியா செல்ல விரும்புவோருக்கான பயணக் கட்டணம் மும்மடங்காகலாம் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

விமானத்திலும் பேருந்திலும் மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்வோருக்கு இது பொருந்தும்.

2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10, 11ஆம் தேதிகளில் சீனப் புத்தாண்டு வருகிறது. அப்போது மலேசியாவுக்கான பயணச்சீட்டுக் கட்டணங்கள் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சிலர் இப்போதே பயணச் சீட்டுகளை வாங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி சில பயணச் சீட்டுகளின் விலை இரு மடங்காகிவிட்டன.

பிப்ரவரி மாதம் நான்கிலிருந்து 10ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் கோலாலம்பூர் செல்வதற்கான ஒரு வழி விமானக் கட்டணம் 81லிருந்து 552 வெள்ளி வரை வருகிறது. அந்தக் காலகட்டத்துக்கு முந்திய வாரத்துக்கான கட்டணத்தை ஒப்பிடுகையில் விலை 70லிருந்து 214 வெள்ளி வரை அதிகரித்துள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

மற்ற காலகட்டங்களைக் காட்டிலும் சீனப் புத்தாண்டு காலத்தில் மலேசியா செல்வதற்கான விமானச் சீட்டுகளுக்கான தேவை மும்மடங்காகியிருப்பதாக ‌ஜெட்ஸ்டார் ஏ‌ஷியா விமான நிறுவனத்துக்கான பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

“சீனப் புத்தாண்டு காலம் என்றுமே பலர் அதிகப் பயணங்களை மேற்கொள்ளும் காலம். அந்தக் காலகட்டத்தில் பலர் தங்கள் குடும்பத்தாரையும் நண்பர்களையும் காண விரும்புவதால் சிங்கப்பூர்-கோலாலம்பூர் பாதை ஆக அதிகமாகப் பயணங்கள் இடம்பெறுபவற்றில் ஒன்று,” என்று அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

சீனப் புத்தாண்டு காலத்துக்கு முந்திய வாரம் ஸ்கூட் விமானத்தில் சிங்கப்பூரிலிருந்து ஈப்போ செல்வதற்கான பயணக் கட்டணம் 183லிருந்து 513 வெள்ளி வரை வருகிறது. ஜனவரி மாதம் 28ஆம் தேதிக்கும் பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் அக்கட்டணம் 89லிருந்து 214 வெள்ளி வரை இருக்கிறது.

பேருந்து நிறுவனங்களும் பயணக் கட்டணங்களை உயர்த்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்