அதிவேக பெருவிரைவு ரயில் (ஹை ஸ்பீட் எம்ஆர்டி) சேவைக்கான சோதனைப் பாதை துவாசில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்காசியாவில் இத்தகைய ரயில் சோதனைப் பாதை கட்டப்படுவது இதுவே முதல்முறை.
மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் செல்லும் பெருவிரைவு ரயில்களைச் சோதிக்க இந்த மூன்று கிலோமீட்டர் நீளம்கொண்ட ரயில் பாதை வழிவகுக்கும். சிங்கப்பூர் ரயில் சோதனை நிலையத்தின் (எஸ்ஆர்டிசி) முதற்கட்டத்தில் இந்த சோதனைப் பாதை அடங்கும்.
வட்டப் பாதையின் ஆறாம் கட்டத்தில் சேவைகளை வழங்கவுள்ள இரண்டு புதிய ரயில்கள் இந்தப் பாதையில் சோதித்துப் பார்க்கப்படுவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் வியாழக்கிழமையன்று தெரிவித்தது. வட்டப் பாதையின் ஆறாம் கட்டத்தில் இடம்பெறும் ரயில் நிலையங்கள், ஹார்பர்ஃபிரண்ட், மரினா பே நிலையங்களை இணைக்கும்.
சிங்கப்பூர் ரயில் சோதனை நிலையம் 2025ஆம் ஆண்டுக்குள் கட்டிமுடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான 85 விழுக்காட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
அந்நிலையத்தை முதலில் 2024ஆம் ஆண்டுக்குள் கட்டிமுடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலால் அந்த 640 மில்லியன் வெள்ளித் திட்டம் ஓராண்டு காலத்துக்குத் தள்ளிப்போனது.
நிலையத்தின் கட்டுமானப் பணிகளின் இரண்டாம் கட்டத்தில் மேலும் இரண்டு சோதனைப் பாதைகள் அமைக்கப்படும். அவற்றில் ஒன்றின் நீளம் மூன்று கிலோமீட்டர், மற்றொன்றின் நீளம் 2.8 கிலோமீட்டர்.
அவற்றோடு ஒரு செயல்பாட்டு நிலையம், ஒரு நிர்வாகக் கட்டடம் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
நிலையம் கட்டிமுடிக்கப்பட்ட பிறகு இயக்கநிலையில் இருக்கும்போது மாதிரி பெருவிரைவு ரயில் கட்டமைப்பைப் போன்று செயல்படும். தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் இதனைத் தெரிவித்தார். வியாழக்கிழமையன்று நடைபெற்ற சிங்கப்பூர் ரயில் சோதனை நிலையத்தின் முதற்கட்டத்துக்கான பணிகளின் நிறைவு விழாவில் கலந்துகொண்டபோது திரு சீ இவ்வாறு பேசினார்.
2030களின் தொடக்கம் வரை ரயில் பாதைகள் இதுவரை இல்லாத அளவில் நீட்டிக்கப்படவுள்ளன. இப்படிப்பட்ட சூழலில் நிலையத்துக்கான பணிகள் இடம்பெறுவதை அமைச்சர் சுட்டினார்.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதை, குறுக்குத் தீவுப் பாதை உள்ளிட்டவற்றுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை திரு சீ குறிப்பிட்டார்.
“பழமையடைந்துவரும் ரயில் கட்டமைப்புக்குக் கூடுதல் பழுதுபார்ப்புப் பணிகள் தேவைப்படும். அவற்றுக்குக் கைகொடுப்பதுதான் சிங்கப்பூர் ரயில் சோதனை நிலையத்தின் நோக்கம்,” என்று திரு சீ கூறினார்.

