தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் மனநல ஆலோசகர்களுக்கான தொழில் பாதையை உருவாக்கித் தர புதிய திட்டம்

2 mins read
7a6c23bd-2a94-493c-a0d3-5945c9be2874
திட்டம், சமூக சேவைக்கான தேசிய திறன்கள் கட்டமைப்பின்கீழ் வருகிறது. - படம்: அன்ஸ்பிளா‌ஷ்

சமூக சேவைக்கான தேசிய திறன்கள் கட்டமைப்பின்கீழ் மனநல ஆலோசகர்களுக்குத் தொழில் பாதையை உருவாக்கித் தர புதிய திட்டம் வரையப்பட்டுள்ளது.

இத்திட்டம், மனநல ஆலோசனையில் உள்ள வெவ்வேறு வேலைப் பொறுப்புகளை விவரிக்கும். மனநல ஆலோசகராகப் பணியாற்றுவது, அது சார்ந்த நிர்வாகம், ஆய்வு உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி திட்டத்தை அறிவித்தார்.

புதிய திட்டம், அத்துறையின் தேவைகளைக் கருத்தில்கொண்டு மனநல ஆலோசகர்கள் வேலையில் முன்னேறவும் அவர்களுக்கான பயிற்சிகளை வரையவும் உதவும் என்று திரு மசகோஸ் குறிப்பிட்டார்.

மனநல ஆலோசகர்கள் தங்களின் ஆற்றலை வளர்த்துக்கொள்ள அவர்களின் வேலைக்குத் தேவையான குறிப்பிட்ட நான்கு புதிய திறன்கள் தேசிய திறன்கள் கட்டமைப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன.

நிபுணத்துவக் கண்காணிப்பு, மனநல ஆலோசனையில் தொழில்நுட்பப் பயன்பாடு உள்ளிட்டவை அந்தத் திறன்களில் அடங்கும்.

2020ஆம் ஆண்டில் சிங்கப்பூர் மனநல ஆலோசக சங்கத்துடன் பதிவு செய்துகொண்ட மனநல ஆலோசகர்களின் எண்ணிக்கை 940ஆக இருந்தது. 2022ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 1,240க்கு உயர்ந்தது. பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள புள்ளிவிவரங்களில் இத்தகவல்கள் தெரிய வந்துள்ளன.

சமூக சேவைக்கான திறன் கட்டமைப்பு 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வேலைப் பொறுப்புகள் உட்பட நான்கு அம்சங்கள் தொடர்பான தகவல்களை அது விவரிக்கிறது.

சிங்கப்பூர் மக்கள்தொகை, சமூக சேவைத் துறை ஆகியவற்றின் மாறிவரும் தேவைகளுக்கேற்ப அந்த நான்கு அம்சங்கள் வரையப்பட்டுள்ளதாக திரு மசகோஸ் குறிப்பிட்டார்.

கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்துக்குப் பிறகு மெய்நிகரில் வழங்கப்படும் மனநல ஆலோசனைக்கான தேவை அதிகரித்திருப்பது அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

குறிப்புச் சொற்கள்