சைனாடவுன் வட்டாரத்தில் உள்ள பெர்ல்ஸ் ஹில் பகுதியில் சுமார் 40 ஆண்டுகளில் முதன்முறையாக புதிய வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகள் கட்டப்படவுள்ளன.
சிங்கப்பூரின் மத்திய வட்டாரங்களில் பல்வேறு வகையான வீடுகளை அமைத்துத்தரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அங்கமாக பெர்ல்ஸ் ஹில்லில் புதிய வீடுகள் கட்டப்படுகின்றன.
அடுத்த 10 ஆண்டுகளில் மலைப் பகுதியான பெர்ல்ஸ் ஹில்லில் கிட்டத்தட்ட 6,000 அரசாங்க, தனியார் வீடுகள் கட்டப்படும். அவற்றில் தேவைக்கேற்பக் கட்டப்படும் (பிடிஒ) வீவக வீடுகளும் அடங்கும்.
நகரில் உள்ள மலைப் பகுதியில் வாழும் மாறுபட்ட அனுபவத்தை இந்தப் புதிய வீடுகள் வழங்கும் என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் (யூஆர்ஏ) கூறியது.
பெர்ல்ஸ் ஹில், மரினா சவுத் ஆகிய பகுதிகளில் அமையவுள்ள குடியிருப்புத் திட்டங்களைச் சித்திரிக்கும் காட்சியகம் மேக்ஸ்வெல் சாலையில் உள்ள தி யூஆர்ஏ சென்டர் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. ‘மை சிட்டி, மை ஹோம்’ என்று அந்தக் காட்சியகத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது.
புக்கிட் தீமா டர்ஃப் சிட்டி, மவுன்ட் பிளெசன்ட், முன்பு கெப்பல் கோல்ஃப் மைதானம் இருந்த பகுதி உள்ளிட்டவற்றுக்கான திட்டங்களும் காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன. ‘கிரேட்டர் சவுதன் வாட்டர்ஃபிரண்ட்’ என்றழைக்கப்படும் சிங்கப்பூரின் தெற்குப் பகுதியில் அமைக்கப்படும் நீர்முகப்புப் பகுதிக்கான திட்டங்களில் அவை அடங்கும்.
‘கிரேட்டர் சவுதன் வாட்டர்ஃபிரண்ட்’, பாசிர் பஞ்சாங்கிலிருந்து மரினா ஈஸ்ட் பகுதி வரையிலான பகுதிகளை உள்ளடக்கும்.
அடுத்த 10லிருந்து 15 ஆண்டுகளில் சிங்கப்பூரின் வளர்ச்சி, நிலப் பயன்பாடு ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளைப் பெருந்திட்ட வடிவம் 2025 (டிராஃப்ட் மாஸ்டர்பிளான் 2025) விவரிக்கிறது. அதன்கீழ் இந்த வீடமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் மத்தியப் பகுதியில் தற்போது இரண்டு மலைப் பகுதிகள் எஞ்சியுள்ளன. அவற்றில் ஒன்றான பெர்ல்ஸ் ஹில்லில் புதிய தேவைக்கேற்பக் கட்டப்படும் வீவக வீடுகள், வாடகை வீடுகள், கூட்டுரிமை வீடுகள் உள்ளிட்டவை கட்டப்படும்.
முன்னாள் காவல்துறை ஆணையர் பங்களா, முன்னாள் காவல்துறை தங்குமிடங்கள் ஆகியவை பெர்ல்ஸ் ஹில்லில் அமைந்துள்ளன. 1920களிலும் 30களிலும் கட்டப்பட்ட அவை வரலாற்றுச் சிறப்புமிக்கவை. அதனால் அவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
பெர்ல்ஸ் ஹில் காரில்லா வட்டாரமாக மாறவுள்ளது. அங்கு சைக்கிளோட்டப் பாதைகள், நடைபாதைகள் ஆகியவற்றைக் கொண்ட கட்டமைப்பு உருவாக்கப்படும் என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் குறிப்பிட்டது.

