தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முக்கிய நிறுவனங்களின் கணிசமான முதலீடுகளை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் பரிந்துரை

2 mins read
784c8613-b137-4416-9505-b8f0d2729f28
மசோதாவின் முதல் வாசிப்பு அடுத்த வாரம் நடைபெறும் நாடாளுமன்ற அமர்வில் இடம்பெறும். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சில முக்கிய நிறுவனங்களில் கணிசமான முதலீடுகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளது.

அந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால், உரிமையாளர்களில் அல்லது தலைமைத்துவப் பொறுப்புகளில் வரும் சில மாற்றங்ங்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஒப்புதல் பெறவேண்டும்.

இத்தகைய அணுகுமுறையைப் பல உலக நாடுகள் பின்பற்றி வருகின்றன. தங்கள் பொருளியலும் சமுதாயமும் சரியாகச் செயல்பட உறுதுணையாக இருக்கும் துறைகளைப் பாதுகாக்க நாடுகள் சில முதலீடுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.

அந்த வகையில் சிங்கப்பூரின் தேசியப் பாதுகாப்பு சார்ந்த அக்கறைகளுக்கு முக்கியமான நிறுவனங்களின் முதலீடுகளை ஒழுங்குபடுத்துவது முக்கிய முதலீடுகள் மறுஆய்வு மசோதாவின் நோக்கம். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெறும் உள்ளூர், வெளியூர் முதலீடுகளுக்கு இது பொருந்தும்.

எனினும், அத்தகைய நிறுவனங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட புதிய சட்டத்தின்கீழ் சிங்கப்பூரில் தொடங்கப்பட்ட நிறுவனங்கள், சிங்கப்பூரில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள், இங்குள்ள மக்களுக்கு பொருள்களையும் சேவைகளையும் வழங்கும் நிறுவனங்கள் உள்ளிட்டவை முக்கியமானவையாக வகைப்படுத்தப்படலாம் என்று வர்த்தக, தொழில் அமைச்சு வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தது.

புதிய சட்டம் தனிப்பட்ட நிறுவனங்களுக்குப் பொருந்தும் என்று வர்த்தக, தொழில் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார். சம்பந்தப்பட்ட நிறுவனங்களைக் கொண்டுள்ள ஒட்டுமொத்த துறைகளுக்கு சட்டம் பொருந்தாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது துறைகளுக்கென சில சட்டங்கள் நடப்பில் உள்ளன. உதாரணமாக, வங்கி, தொலைத்தொடர்பு போன்ற துறைகளில் நிறுவனங்களுக்கு உரிமையாளராக இருப்பது போன்றவற்றை ஒழுங்குபடுத்த கட்டுப்பாட்டுச் சட்டங்கள் உள்ளன. அவற்றுக்கு வலுசேர்ப்பது புதிய சட்டத்தின் இலக்கு.

அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூடவிருக்கிறது. அப்போது மசோதாவின் முதல் வாசிப்பு இடம்பெறும்.

இரண்டாம் வாசிப்பு 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டால் சில மாதங்களுக்குப் பிறகு புதிய சட்டம் அமல்படுத்தப்படும் என்று வர்த்தக, தொழில் அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்