முற்றிய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தேவையற்ற சிகிச்சைகளைத் தவிர்ப்பது பற்றி சிங்கப்பூரில் நடைபெற்று வரும் மருந்தகச் சோதனை நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டியுள்ளது.
நோயாளிகளின் உயிரியல் சிகிச்சையின்போது புற்றுநோய் உயிரணுக்களைப் பிரித்தெடுப்பது, ஆய்வகத்தில் புற்றுநோய் அணுக்களை வளர்ப்பது, உயிரணுக்களில் மருந்துகளை பரிசோதிப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும்.
இந்த அணுகுமுறை 70 விழுக்காடு நோயாளிகளை அவர்களுக்கு பயனற்ற சிகிச்சைகளிலிருந்து பாதுகாக்க முடியும் என்று பரிசோதனையை வழிநடத்தும் புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் யோங் வெய் பெங் கூறினார்.
“இதனால் நோயாளிகளின் செலவைக் குறைக்கவும், தேவையற்ற சிகிச்சையின் நச்சுத்தன்மையின் வெளிப்பாட்டைக் குறைக்கவும் முடியும்,” என்றார் டாக்டர் யோங். இவர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக புற்றுநோய் கழகத்தில் (என்.சி.ஐ.எஸ்) ஆய்வுப் பிரிவின் இணை இயக்குநராகவும், மூத்த ஆலோசகராகவும் உள்ளார்.
தனிப்பட்ட புற்றுநோய் சிகிச்சைகளுக்கு வழிவகுக்கும் இந்த நுட்பத்தை உலகளவில் சோதனை செய்த முதல் அமைப்புகளில் என்சிஐஎஸ் ஒன்றாகும்.
முற்றிய இரைப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆறு நோயாளிகள் இதுவரை சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். நேரடியாக நோயாளியிடம் மருந்துகளைப் பரிசோதிப்பதில் பெறும் அதே முடிவுகளை, புற்றுநோய் உயிரணுவைப் பிரித்தெடுத்து அதில் மருந்துகளை பரிசோதனை செய்வதன் மூலம் பெறமுடியும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
அதாவது, நோயாளிக்கு மருந்துகள் எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதை புற்று உயிரணுவில் சோதித்தே அறிந்துகொள்ளலாம்.
மருந்துகளை பரிசோதிக்க போதுமான புற்று உயிரணுக்களை வளர்க்க ஆறு வாரங்கள் முதல் நான்கு மாதங்கள் வரை ஆகலாம். ஆனால் தொடக்கநிலை புற்றுநோய் சிகிச்சையில் இந்த சோதனை முறை தற்போது தேவையில்லை என்பதால் சிகிச்சை தாமதப்படாது என்று டாக்டர் யோங் கூறினார்.