ஊழல் ஊடுருவ அனுமதிக்க மாட்டோம்: பிரதமர் லீ உறுதி

ஆளும் மக்கள் செயல் கட்சி நேர்மையிலும் ஊழலற்ற செயல்பாட்டிலும் கொண்டுள்ள உறுதிப்பாடு “முற்றிலும் சமரசமற்றது” என்று பிரதமர் லீ சியன் லூங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

உச்ச தரத்திலான நேர்மை, திறமையான ஆளுமையின் தேவையை அவர் வலியுறுத்தினார்.

“சிங்கப்பூர் சிறியது. இந்நாட்டின் அமைப்புமுறை சரியாக செயல்படுகிறது,” என்று சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடந்த கட்சி மாநாடு, விருதளிப்பு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் லீ கூறினார்.

“முறையற்ற வகையில் ஏதாவது செய்தால், விரைவிலோ அல்லது பின்னரோ அது தெரிய வரும். அப்போது நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். நீங்கள் தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால், நீங்கள் வெளியேற்றப்படுவீர்கள். பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும்,” என்று ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மசெக மாநாட்டில் பங்கேற்ற 1,000க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்களிடம் திரு லீ தெரிவித்தார்.

மசெகவின் தலைமைச் செயலாளரான பிரதமர் லீ, இந்தக் கொள்கை அமைச்சர் அல்லது கட்சித் தலைவர்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு கட்சி உறுப்பினருக்கும் பொருந்தும் என்றார். பதவியை துஷ்பிரயோகம் செய்யவோ அல்லது சலுகை, உதவிகளை ஏற்றுக்கொள்ளவோகூடாது என்று அவர் எச்சரித்தார்.

“இது வெட்கக்கேடானது. அது தவறு.

“நீங்கள் மக்கள் செயல் கட்சியின் உறுப்பினர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மக்களுக்குச் சேவை செய்வது, ஒருபோதும் உங்களுக்காக செயல்படாமல், எப்போதும் மக்களுக்காகவே செயல்படுவதே உங்கள் கடமை. இதையே கட்சியின் பெயர் சொல்கிறது,” என்று அவர் மேலும் கூறினார். ஊழலின் தாக்கம் சிங்கப்பூரில் ஏற்படாமல் இருப்பதன் தேவையையும் அவர் சுட்டினார்.

“நேர்மையையும் உண்மையையும் ஒருபோதும் விட்டுக்கொடுக்கக்கூடாது. அந்த வகையில்தான் சிங்கப்பூரர்கள் கட்சி மீது கொண்டுள்ள நம்பிக்கையை நிலைநாட்ட முடியும்,” என்றார் பிரதமர் லீ.

அமைச்சர் ஒருவர் மீதான லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு விசாரணையை அவர் சுட்டிக்காட்டினார்.

“ஒழுங்குமுறைகள் எவ்வளவு கண்டிப்பானதாக இருந்தாலும், எவ்வளவு வைராக்கியத்துடன் இருந்தாலும் எங்கேயாவது, எப்போதாவது, யாரோ ஒருவரால் தூண்டப்பட்டு வழிதவறிச் செல்வது மனித இயல்பு,” என்றார் அவர்.

“குறிப்பாக, சோதனையை எதிர்கொள்ளும்போது, தர்மசங்கடமான நிலை அல்லது அரசியல் இழப்பு எதுவாக இருந்தாலும், கொள்கையில் வலுவாது நின்று நமது உறுதியை நிரூபிக்க வேண்டும்,” என்ற திரு லீ, கட்சியின் தரநிலை “எப்பொழுதும் இல்லாத அளவுக்கு உயர்வாக இருப்பதை” சிங்கப்பூரர்களுக்கும் உலகிற்கும் எடுத்துக்காட்டுமாறு மசெக உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார்.

உலகின் மிகப் பெரிய வழக்குகளில் ஒன்றாக நம்பப்படும் 2.8 பில்லியன் வெள்ளி பண மோசடி வழக்கையும் பிரதமர் லீ குறிப்பிட்டார், இதில் ஒன்பது ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டு பண மோசடி, ஏமாற்றுச் செயல், கைது நடவடிக்கையை எதிர்த்தது உள்ளிட்ட குற்றங்களுக்காகக் குற்றம் சாட்டப்பட்டனர்.

குடும்ப அலுவலக முதலீட்டு நிதியை ஊக்குவிப்பதால் செல்வந்தர் குடும்பங்கள் தங்கள் சொத்துகளை நிர்வகிக்க அனுமதிக்ப்படுகிறது. இதன் மூலம் சிங்கப்பூர் “கள்ளப் பணத்தை” ஈர்க்க தன் தரத்தை நழுவ விடுகிறதா என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி பற்றிக் குறிப்பிட்ட திரு லீ, “ஒருபோதும் இல்லை” என்றார்.

“சிங்கப்பூரின் தரநிலைகளை ஒருபோதும் சரிய விடமாட்டோம். அது மதிப்புக்குரியதல்ல. அதை அனுமதித்தால், தரத்தைத் தளர்த்தி, கள்ளப் பணத்தை அனுமதித்தால், மிக விரைவில், சிங்கப்பூரின் முழு அமைப்பும் கறைபடிந்து, பின்னர் ஊழல் ஊடுருவி விடும்,” என அவர் கூறினார்.

பண மோசடி தொடர்பான அறிகுறிகளை 2021ல் அறிந்த அமலாக்கத் துறையில் பண மோசடி கட்டமைப்பைக் கவனமாகக் கண்காணித்து அவர்களைச் சுற்றி வளைத்ததை சுட்டிய பிரதமர், சிங்கப்பூரில் வணிகம் செய்யும் அனைவரும் இந்நாட்டின் செயல்பாட்டை அறிந்திருக்க வேண்டும் என்றார்.

“ஊழல் ஊடுருவ ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்,” என்று திரு லீ உறுதி கூறினார்.

அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தலைமைப் பொறுப்பை ஏற்கவிருக்கும் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் தாமும் இங்கு அரசியலை சுத்தமாகவும், நேர்மையாகவும், சரியாகவும் வைத்திருப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளதாக பிரதமர் லீ கூறினார்.

நேர்மையான செயல்பாடு என்பதுடன், மசெகவின் மற்றொரு அடிப்படை தெளிவான, வலுவான நிர்வாகம் என்றார் அவர்.

அரசாங்கம் அதன் பொறுப்புகளுக்கும் மேலாக செயல்பட வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாகவும் இருக்க வேண்டும், உடனடியாகவும் செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

“கடினமான முடிவுகளை எடுக்கத் தயாராக இருக்க வேண்டும். இது குறுகிய கால அரசியல் இழப்புகளைத் தந்தாலும் சிங்கப்பூருக்குச் சரியானதைச் செய்ய தைரியம் வேண்டும். அதற்கு நாம் தயாராக இல்லாவிட்டாலோ அல்லது முடியாமல் போனாலோ, நாம் விலகிவிட வேண்டும்,” என்றார் அவர்.

தொடக்கத்தில் இருந்த சந்தேகங்கள், எதிர்ப்புகளையும் மீறி மசெக, தேசிய சேவை, பொது வீடமைப்பில் மக்களைக் குடியமர்த்தல் போன்ற கடுமையான கொள்கை முடிவுகளை எடுத்ததை பிரதமர் உதாரணமாக சுட்டினார்.

இதுபோல் சிங்கப்பூருக்கு எப்போதும் சிறந்ததையே கட்சி செய்து வந்துள்ளதாக கூறிய பிரதமர், அதற்கு எடுத்துக்காட்டாக மற்ற அவசர பிரச்சினைகளுக்கிடையே கொவிட்-19 கொள்ளை நோயை எதிர்கொண்ட விதத்தையும் எடுத்துக்கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!