இணையச் சேவை நிறுவனமான மைரிபப்ளிக்கின் பயனீட்டாளர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை தங்களின் கைப்பேசித் தொடர்பிலும் இணையத் தொடர்பிலும் பிரச்சினைகளை எதிர்கொண்டனர்.
பின்னர் தங்களின் இணையத் தொடர்புகள் சீரானதாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுமார் 2.30 மணிக்கு மைரிபப்ளிக் தனது இணையத்தளத்தில் தெரிவித்தது.
இணையச் சேவை இடையூறுகள் குறித்த தகவல்களைக் கொண்டுள்ள டவுன்டிடெக்டர் இணையத்தளத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 6.30 மணி முதல் மைரிபப்ளிக் மீதான புகார்கள் அதிகரிக்கத் தொடங்கின. காலை 10.47 மணி நிலவரப்படி 134 புகார்கள் பதிவாயின.
தங்களின் 4ஜி கட்டமைப்பைப் பயன்படுத்துவோரின் தொடர்பில் பாதிப்பு ஏற்பட்டதை உணர்வதாக காலை 9.45 மணிக்கு மைரிபப்ளிக் தனது இணையத்தளத்தில் தெரிவித்தது. இதன் பின்னால் உள்ள காரணத்தை அடையாளம் காணும் முயற்சியில் தனது இணையக் கட்டமைப்புக் குழு ஈடுபட்டதாகவும் மேல்விவரங்கள் பின்னர் வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.
நிறுவனத்தின் பயனீட்டாளர்கள் பலர் ஃபேஸ்புக்கில் தங்கள் வருத்தங்களைத் தெரியப்படுத்தினர். டாக்சி எடுப்பதற்காகப் பதிவுசெய்வது போன்ற செயல்களைக்கூட தங்களால் மேற்கொள்ள முடியாமல் போனதாக சிலர் கூறினர்.
மைரிபப்ளிக்கின் உதவி அழைப்பு எண்ணைத் தொடர்புகொள்ள முடியாமல் இருந்ததாகவும் சில பயனீட்டாளர்கள் தெரிவித்தனர்.