சிங்கப்பூரில் அளவுக்கு அதிகமாக மக்கள் உப்பு உட்கொள்வதைக் குறைக்கும் முயற்சியில் குறைந்த ‘சோடியம்’ கொண்ட உணவுப்பொருள் வகைகளையும் தேவையையும் அதிகரிப்பதாக உணவுத்துறையினர் கடப்பாடு தெரிவித்துள்ளனர்.
உணவு வர்த்தக நடத்துநர்கள், பிரதான உணவு உற்பத்தியாளர்கள் என மொத்தம் 15 தரப்பினர் இந்த முயற்சிக்காக இணைந்துள்ளனர்.
சுவையூட்டிகளுக்கான வர்த்தகச் சந்தையில் 30 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட சதவீதத்தை இந்த 15 தரப்பினர் பிரதிநிதிக்கின்றனர். அத்துடன் உணவு பான வர்த்தகச் சந்தையில் இவர்கள் 10 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட சதவீதமுடையவர்கள் என்று நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமையன்று சுகாதார மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸாம் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சும் சுகாதார மேம்பாட்டு வாரியமும் (எச்பிபி) வெளியிட்ட ஆய்வு முடிவுகளின்படி, சிங்கப்பூரில் பத்தில் 9 பேர் பரிந்துரைக்கப்பட்ட அளவைக் காட்டிலும் உப்பை அதிகம் உட்கொள்வது தெரியவந்தது.
‘ஆரோக்கிய உணவுப்பொருள் மேம்பாட்டுத் திட்டம்’ வழியாக உப்பு, சுவையூட்டி வழங்குநர்கள் தங்களின் உணவுப்பொருளை மாற்றி அமைப்பதற்கு எச்பிபி, மானிய ஆதரவு அளிப்பதாக திருவாட்டி ரஹாயு சுட்டினார்.
உணவுக்கடைக்காரர்கள், உணவகங்களில் வேலை செய்வோர், உணவுச் சேவை வழங்குவோர், சமையல்காரர்கள் ஆகியோரிடம் உப்பின் அளவைக் குறைப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்த அரசாங்கம் விளக்கம் அளிப்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மக்களுக்கும் இதை உணர்த்துவதற்கு எச்பிபி அதன் இயக்கத்தை தீவிரமாக்கும் என்றார் திருவாட்டி ரஹாயு.
சோடியம் தொடர்பாக வரி விதிக்கும் நடைமுறை சில நாடுகளில் அமல்படுத்தப்பட்டிருப்பது குறித்து அரசாங்கம் ஆய்வு செய்ததை அடுத்து எத்தகைய கொள்கை மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று செம்பவாங் குழுத்தொகுதியைச் சேர்ந்த டாக்டர் லிம் வீ கியாக் கேட்ட கேள்விக்கு திருவாட்டி ரஹாயு பதிலளித்திருந்தார்.