சிங்கப்பூரில் 2.0 என்ற பெயரில் மின்னியல் சாலைக் கட்டண முறையின் புதிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.
அதில் பல புதிய வசதிகள் இடம்பெற்று இருக்கும் என்பது நாடாளுமன்றத்தில் போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் வெளியிட்ட தகவலிலிருந்து தெரிய வருகிறது.
எந்தெந்த இடங்களில் சாலைக் கட்டணம் இருக்கும், எவ்வளவு கட்டணம் இருக்கும் என்பதை முன்கூட்டியே காட்டும் அறிவிப்புப் பலகைகள் இருக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
வாகனத்தில் பொருத்தப்படும் உள்வாகனச் சாதனமும் மின்னியல் சாலைக் கட்டணச் சாவடிகளை நெருங்கும்போது அது பற்றி ஓட்டுநர்களை எச்சரிக்கும் என்றார் அவர்.
மக்கள் செயல் கட்சியின் மவுண்ட்பேட்டன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான லிம் பியோவ் சுவான் கேட்ட கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
தங்களுடைய வாகனங்களுக்குத் தொடுதிரை இல்லாத சாதனத்தை வாகனமோட்டிகள் தேர்வு செய்ய வாய்ப்பு அளிக்கப்படும்.
அப்படியும் மின்னியல் சாலைக் கட்டணம் பற்றிய விவரங்களை கைப்பேசி செயலி வழியாகப் பெற முடியும்.
வாகனமோட்டிகள் தங்களுடைய வாகனத்தில் புதிய உள்வாகனச் சாதனத்தை பொருத்துவது கட்டாயமாகும். தொடுதிரை ஒரு வாய்ப்பாக வழங்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
வாகனத்தில் செயலாக்கச் சாதனம், அலைவாங்கி ஆகிய இரண்டையும் வாகனங்களில் பொருத்த வேண்டும். தொடுதிரை வேண்டும் என்றால் பொருத்திக் கொள்ளலாம். மோட்டார் சைக்கிள்களுக்கு இவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரே சாதனமாக இருக்கும்.
வாகனமோட்டிகள் தொடர்ந்து ஈஸி லிங்க், மோட்டாரிங் கார்ட், நெட்ஸ் ஃபிளாஷ்பே மற்றும் நெட்ஸ் மோட்டாரிங் கார்ட் போன்ற கட்டண அட்டைகளைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும். இருந்தாலும் கேஷ்கார்ட் வேலை செய்யாது. இந்த அட்டைகள் படிப்படியாக அகற்றப்படவிருக்கிறது.