சிங்கப்பூரின் ஆகப் பெரிய இயற்கை வனப்பகுதிக்குச் சென்ற இளவரசர் வில்லியம்

சிங்கப்பூரின் ஆகப் பெரிய இயற்கை வனப்பகுதிக்குச் சென்ற இளவரசர் வில்லியம்

2 mins read
89398aa4-1e5e-48bd-a504-b194a195b43c
25 மீட்டர் உயரமுள்ள தொங்குப் பாலத்தில் நடந்து சென்ற இளவரசர் வில்லியம், துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிரிட்டிஷ் இளவரசர் வில்லியமும் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் சிங்கப்பூரின் ஆகப் பெரிய இயற்கை வனப்பகுதியான வின்சோர் இயற்கைப் பூங்காவிற்கு புதன்கிழமை காலை வருகை புரிந்தனர்.

இளவரசர் வில்லியம் சிங்கப்பூருக்கு நான்கு நாள் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அந்தப் பயணத்தின் ஓர் அங்கமாக அவர் இப்பூங்காவுக்குச் சென்றார்.

அதுமட்டுமல்லாது, செவ்வாய்க்கிழமையன்று 2023 எர்த்ஷாட் பிரைஸ் திட்டம் தொடர்பான நிகழ்வில் அவர் கலந்துகொண்டார். இத்திட்டத்தை இளவரசர் வில்லியம் தொடங்கிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகப் பெரிய சுற்றுப்புறச் சவால்களுக்குத் தீர்வு காண உகவும் வகையில் ஐந்து வெற்றியாளர்களுக்குத் தலா ஒரு மில்லியன் பவுண்டு (S$1.67 மில்லியன்) வழங்கப்பட்டது.

தேசிய பூங்காக் கழகத்தின் மத்திய நீர்ப்பிடிப்பு இயற்கை வனத்தின் இயக்குநர் லிங் ஹானின் வழிகாட்டுதலுடன் இளவரசர் வில்லியமும் திரு வோங்கும் 25 மீட்டர் உயரமுள்ள தொங்குப் பாலத்தில் நடந்தனர்.

இந்தப் பாலம் வனப்பகுதியின் இரண்டு ஆக உயரமான பகுதிகளை இணைக்கிறது.

அங்கிருந்து வனப்பகுதியில் உள்ள பல்வேறு விலங்குகள், தாவரங்களைப் பார்க்க முடியும்.

அந்த வனப்பகுதியில் இளவரசர் வில்லியமும் திரு வோங்கும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இருந்தனர்.

அங்கு அவர்கள் தேசிய பூங்காக் கழக இயற்கைத் திட்டத்தின் இளம் தொண்டூழியர்களைச் சந்தித்தனர்.

இந்தத் தொண்டூழியத் திட்டம் 2021ஆம் ஆண்டில் தொடங்கியது.

இயற்கை தொடர்பான திட்டங்களை நடைமுறைப்படுத்த இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இளவரசர் வில்லியம் திங்கட்கிழமையன்று ‘யுனைடெட் ஃபார் வைல்ட்லைஃப்’ எனும் வனவிலங்கு தொடர்பான உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்டார்.

‘யுனைடெட் ஃபார் வைல்ட்லைஃப்’ திட்டம் இளவரசர் வில்லியம், பிரிட்டிஷ் அரச குடும்ப அறநிறுவனத்தால் 2014ஆம் ஆண்டில் தொடங்கிவைக்கப்பட்டது.

சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தைத் தடுக்க இத்திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்