பெரிய கார்களுக்கான சிஓஇ கட்டணம் 26.6% சரிவு

1 mins read
19a1d068-a0d7-4990-94b3-93c74d17ef99
எல்லாp பிரிவுகளிலும் சிஓஇ கட்டணம் குறைந்தது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எல்லாப் பிரிவுகளிலும் வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணம் குறைந்துள்ளது.

பெரிய கார்கள், மின்சார வாகனங்கள் ஆகியவற்றுக்கான பிரிவில்தான் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் ஆக அதிகம் குறைந்தது. அத்தகைய வாகனங்கள் இடம்பெறும் ‘பி’ பிரிவில் கட்டணம் 150,001 வெள்ளியிலிருந்து 40,000 வெள்ளி குறைந்து, 110,001 வெள்ளியாகப் பதிவானது.

அப்பிரிவுக்கு அடுத்தபடியாக பொதுப் பிரிவில் கட்டணம் 158,004 வெள்ளியிலிருந்து 20.88 விழுக்காடு குறைந்து 125,011 வெள்ளியாகப் பதிவானது.

1,600 சிசி வரைக்குமான கொள்ளளவைக் கொண்ட சிறிய கார்கள், 110 கிலோவாட் வரை சக்தி கொண்ட சிறிய மின்சார கார்கள் ஆகியவற்றுக்கான ‘ஏ’ பிரிவில் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் 9.73 விழுக்காடு குறைந்து 95,689 வெள்ளியாகப் பதிவானது. இப்பிரிவில் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு முதன்முறையாக கட்டணம் 100,000 வெள்ளிக்குக்கீழ் பதிவாகியுள்ளது.

வர்த்தக வாகனங்களுக்கான பிரிவில் கட்டணம் 8.01 விழுக்காடு குறைந்து, 78,001 வெள்ளியாகப் பதிவானது.

மோட்டார்சைக்கிள்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் ஆகக் குறைவான விகிதத்தில் குறைந்தது. இப்பிரிவில் கட்டணம் 2.79 விழுக்காடு குறைந்து 11,201 வெள்ளியாகப் பதிவானது.

இவ்வாண்டு நவம்பர் மாதம் முதல் வரும் ஜனவரி மாதம் வரைக்குமான புதிய வாகன உரிமைச் சான்றிதழ் முறை அறிமுகமாகியுள்ளது. கூடுதல் சான்றிதழ்கள் ஒதுக்குவதற்கான அந்த முறையின்கீழ் இடம்பெற்ற முதல் வாகன உரிமைச் சான்றிதழ் ஏலக் குத்தகை நடவடிக்கை இது.

குறிப்புச் சொற்கள்