கணவரின் குற்றவாளிக் கும்பலுக்குப் துணைபோன பெண்ணுக்குச் சிறை

கணவரின் குற்றவாளிக் கும்பலுக்குப் துணைபோன பெண்ணுக்குச் சிறை

2 mins read
f3ff3c0d-f84d-4378-b4b6-85fd7f6e61f3
குற்றவாளி ங் சோய் சான். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தனது கணவரின் குற்றவாளிக் கும்பலுக்குத் துணைபோனது உள்ளிட்ட குற்றங்களைக் புரிந்த மாதுக்கு 10 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மாதின் கணவரின் குற்றவாளிக் கும்பல் ஆறு மாதக் காலத்தில் சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளின் மூலம் 26.6 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகையைப் பெற்றிருக்கிறது. குற்றவாளியான 67 வயது வோங் சோய் சான், சட்டவிரோதமாக 4டி பந்தயங்களையும் கட்டியிருக்கிறார்.

தொலைதூர சூதாட்டச் சட்டத்தின்கீழ் தன்மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகள், திட்டமிட்டக் குற்றச்செயல் சட்டத்தின்கீழ் சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டு ஆகியவற்றை வோங் ஒப்புக்கொண்டார். குற்றங்கள் இடம்பெற்றபோது அவர் சீட் சியான் தியேன் என்பவரின் மனைவியாக இருந்தார்.

சீட் சியான் சியேனுக்கு அப்போது வயது 74. 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு நான்கரை ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தன்மீது சுமத்தப்பட்டிருந்த நான்கு குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டார்.

திட்டமிட்டக் குற்றச்செயல் சட்டத்தின்கீழ் சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகள் அவற்றில் அடங்கும். சீட்டும் அவரின் இரண்டு சகோதரர்களும் குற்றவாளிக் கும்பலின் தலைவர்களாக இருந்தனர்.

ஒரு சகோதரரான 57 வயது சீட் சியோ பூனுக்கு 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்பது ஆண்டு, எட்டு மாத, இரண்டு வாரச் சிறைத் தண்டனையும் 620,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டன.

மற்றொரு சகோதரரான 68 வயது சீட் சியாவ் ஹுவாட் மீதான நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளது. அவர்தான் குற்றவாளிக் கும்பலின் மூன்றாவது தலைவர் என்று நம்பப்படுகிறது.

மேலும் ஒரு சகோதரரான 74 வயது சியாவ் குவாங்கிற்கு 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான்கு வாரச் சிறைத் தண்டனையும் 30,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டன. இந்த விவகாரத்துக்கு சம்பந்தமில்லா சூதாட்டக் குற்றங்களுக்காக அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்