தீபாவளி வார இறுதியில் லிட்டில் இந்தியாவில் பெருங்கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது வாகனங்கள் அவ்வட்டாரத்துக்குச் செல்வதைத் தவிர்க்கும்படி காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, மதுபானக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும் என்று காவல்துறை வலியுறுத்தியது.
நவம்பர் 11ஆம் தேதி மாலை 4 மணியிலிருந்து நவம்பர் 12ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை பெர்ச் சாலையில் அங்குல்லியா பள்ளிவாசலுக்கு முன் இருக்கும் சாலை கடக்கும் இடம் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேம்பல் லேனில் இருக்கும் சாலைக் கடக்கும் இடமும் தேவைப்பட்டால் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருகில் இருக்கும் சாலை கடக்கும் இடங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் தகவல் பலகைகள் பொருத்தப்படும்.
லிட்டில் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மதுபானக் கட்டுப்பாடு குறித்து பொதுமக்களுக்குக் காவல்துறை நினைவூட்டியது.
அவ்வட்டாரத்தில் நவம்பர் 10ஆம் தேதி இரவு 10.30 மணியிலிருந்து நவம்பர் 14ஆம் தேதி காலை 7 மணி வரை மதுபானம் குடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்த விதிமுறையை மீறுவோருக்கு $1,500 வரை அபராதம் விதிக்கப்படலாம். மீண்டும் மீண்டும் விதிமீறுபவர்களுக்கு $3,000 வரை அபராதம் அல்லது நான்கரை மாதச் சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
தடை விதிக்கப்பட்ட நேரத்தில் மதுபானம் விற்கும் கடைக்காரர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
மத்தாப்புகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கூடுதல் சக்திவாய்ந்த வெடிபொருள்களை வெடிக்கக்கூடாது என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு செய்பவர்களுக்கு சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.