தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொதுக் கழிவறைகள் அசுத்தம்: மூன்றில் இரு சிங்கப்பூரர்கள் கருத்து

2 mins read
1fec787d-5c7c-4863-ad1c-3d1edd860720
உணவங்காடிகளிலும் காப்பிக் கடைகளிலும் உள்ள பொதுக் கழிவறைகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் விவகாரம் தெரிய வந்தது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உணவங்காடிகளிலும் காப்பிக் கடைகளிலும் உள்ள கழிவறைகள் தொடர்ந்து அசுத்தமாக இருக்கின்றன அல்லது 2020ஆம் ஆண்டு இருந்ததைக் காட்டிலும் மேலும் அசுத்தமாக இருக்கின்றன என்பது 66 விழுக்காட்டுக்கும் அதிகமான சிங்கப்பூரர்களின் கருத்து எனக் கருத்தாய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் முழுவதும் இவ்வாண்டு நடத்தப்பட்ட கருத்தாய்வில் இந்த விவரம் தெரிய வந்தது. சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் கருத்தாய்வை நடத்தியது.

2020ஆம் ஆண்டில் கடைசியாக இத்தகைய கருத்தாய்வு நடத்தப்பட்டது.

உணவங்காடிகளிலும் காப்பிக் கடைகளிலும் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்யும் பணிகள் அதிகம் பலனளிக்கவில்லை என்று நினைப்பதாகவும் கருத்தாய்வில் பங்கேற்ற 60 விழுக்காட்டினர் தெரிவித்தனர். சுத்தம் செய்யும் பணிகள் அறவே பலனளிக்கவில்லை என்று எண்ணுவோரும் அவர்களில் அடங்குவர்.

மேலும், ஆறு விழுக்காட்டு சிங்கப்பூரர்கள் மட்டுமே கழிவறைகளை சுத்தமாக வைத்துக்கொள்வதை ஊக்குவிக்கும் இயக்கங்கள் பலனளிப்பதாக நம்புகின்றனர்.

பொதுவாக ஆக சுத்தமான பொதுக் கழிவறைகள் மரீனா சவுத் வட்டாரத்தில் உள்ள உணவங்காடிகளிலும் காப்பிக் கடைகளிலும் இருப்பதாக கருத்தாய்வு முடிவுகள் காட்டுகின்றன. அதற்கு அடுத்தபடியாக ஊட்ரம் பார்க், பூன் லே வட்டாரங்களில் சுத்தமான பொதுக் கழிவறைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

ஆக அசுத்தமான பொதுக் கழிவறைகள் பயனியர், ஊபி, சிங்கப்பூர் ஆற்றின் சுற்றுப்பகுதி ஆகிய இடங்களில் இருப்பதாகக் கருத்தாய்வு முடிவுகள் தெரிவித்தன. 2020, 2016ஆம் ஆண்டுகளில் துவாஸ், சிங்கப்பூர் ஆற்றுப் பகுதிகள் ஆக மோசமான இடத்தில் வந்தன.

உணவங்காடிகளிலும் காப்பிக் கடைகளிலும் உள்ள பொதுக் கழிவறைகள் அசுத்தமாக இருப்பதாகவும் அவை பெரிய அளவில் மாற்றியமைக்கப்படவேண்டும் என்றும் 91.31 விழுக்காட்டுப் பயனீட்டாளர்கள் குறிப்பிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வாட்டர்லூ என்று பெயரிடப்பட்ட இந்தக் கருத்தாய்வு 9,400க்கு அதிகமான சிங்கப்பூரர்களைக் கொண்டு நடத்தப்பட்டது. கருத்தாய்வு ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்