உணவு விநியோகப் பையில் நசுக்கப்பட்ட எலி: உணவு அமைப்பு விசாரணை

1 mins read
3eda503b-fcc2-464a-b91a-54dade82fe85
பிறந்தநாளுக்காக ஆசைப்பட்டு கோரிய உணவுடன் நசுங்கிய எலி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. - படம்: ஃபேஸ்புக்

பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக உணவு விநியோகச் சேவையை நாடிய 37 வயது திருவாட்டி ஃபாராலிஸாவுக்குத் துன்ப அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

ஜப்பானிய-பிரெஞ்சு பாணியில் அமைந்த பிரபல ‘அனபெலா பட்டிசரி’யின் ‘பிரௌனி’யை திருவாட்டி ஃபாராலிஸாவின் ‘கிராப்ஃபுட்’ கணக்கைப் பயன்படுத்தி அவரின் கணவர் வாங்கினார்.

ஏற்கெனவே அதே கடையிலிருந்து உணவு வாங்கியிருப்பதாகவும் கூறப்பட்டது.

வீட்டுக்கு ‘சீல்’ செய்யப்பட்ட பை ஒன்றில் வந்த உணவை திருவாட்டி ஃபாராலிஸா எடுப்பதற்காகக் கதவைத் திறந்தபோது துர்நாற்றம் வீசத் தொடங்கிவிட்டது. படுக்கையறையில் இருந்த அவரின் கணவர்கூட வெளியே வந்துவிட்டதாக அவர் கூறினார்.

பையைத் திறந்து பார்த்தபோது உள்ளே நசுக்கப்பட்ட கோலத்தில் ஓர் எலியின் உடல் இருந்தது. இதைப் பார்த்ததும் திருவாட்டி ஃபாராலிஸா வாந்தி எடுத்துவிட்டதாகவும் கூறினார்.

படங்கள், காணொளிகள் ஆகியவற்றை எடுத்த பிறகு, அவர் அந்தப் பையை வீசிவிட்டார்.

சிங்கப்பூர் உணவு அமைப்பு, ‘கிராப்ஃபுட்’ இரண்டுக்கும் அவர் புகார் அளித்ததை அடுத்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உணவு அமைப்பு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியது.

இந்நிலையில், ‘அனபெலா பட்டிசரி’ திருவாட்டி ஃபாராலிஸாவின் ஃபேஸ்புக் பதிவில் மன்னிப்பு கோரியதுடன் அதன் ஊழியர் ஒருவர் பையைச் சோதனையிட்ட பிறகு உணவை உள்ளே வைக்கும் காணொளி ஒன்றையும் பகிர்ந்தது.

குறிப்புச் சொற்கள்