தனித்துவமிக்க ‘செட்டி மலாக்கா’ தீபாவளி

தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் இந்தியர்கள் மத்தியில் செட்டி மலாக்கா சமூகத்தினரும் அடங்குவர். பல நூற்றாண்டுகளுக்கு முன் மலாயா வந்திருந்த தமிழ் வணிகர்களுக்கும் மலாய், சீனர்களுக்கும் இடையேயான கலப்புத் திருமணங்களால் உருவானதே இந்த ‘செட்டி மலாக்கா’ சமூகம். சிங்கப்பூரில் இன்றளவும் இவர்கள், தங்களுக்குரிய பாரம்பரியத்தைப் பின்பற்றி தீபாவளி கொண்டாடுகின்றனர்.

தீபாவளி பண்டிகைக்காக வர்த்தகர் பொன்னுசாமி காளஸ்திரி, 76, பல்லின விருந்தினர்களை வரவேற்கக் காத்திருக்கிறார்.

பெண்டமியர் ரோட்டிலுள்ள அவரது அடுக்குமாடி வீட்டு வாசலில் வழக்கமான மாவிலைத் தோரணமும் தீபாவளி அலங்காரப் பொருள்களும் காணப்படும்.

இந்து கடவுள்களின் திருவுருவங்கள், சீன எழுத்தோவியங்கள், பெரானாக்கான்-சீன பாணியிலான பெரிய பூச்சாடி, ‘கெபாயா’ எனப்படும் மலாய் ஆடையை அணிந்துள்ள பெண்கள். இப்படி வீட்டுக்குள் நுழையும்போது சீன, மலாய், இந்தியக் கலைக்கூறுகளைக் காண முடிகிறது.

தீபாவளிக்காகத் தயாராகிக் கொண்டிருக்கும் மற்ற வீடுகளைக் காட்டிலும் இக்காட்சி மாறுபட்டதுதான். ஆனால் இந்தக் கலாசாரத்தைத் தங்கள் இமைபோலப் பேணிக்காத்து வருகின்றனர் வீட்டுப் பெரியவர்கள்.

“எல்லா விதங்களிலும் நாங்கள் சிங்கப்பூரர்கள். சிங்கப்பூரின் அடையாளக் கூறுகள் அனைத்துமே எங்கள் கலாசாரத்தில் உள்ளன,” என்று திரு பொன்னுசாமி பெருமிதம் ததும்பும் குரலில் கூறினார்.

சிங்கப்பூரில் ஏறக்குறைய 5,000 ‘செட்டி மலாக்கா’ இந்தியர்கள் உள்ளனர். செட்டி மலாக்கா வீடுகளில் மலாய் பேசப்படுவது வழக்கம் என்றாலும் தமிழ், சீன சொற்கள் அன்றாட வழக்கிலும் பயன்படுத்தப்படுகின்றன. இந்தச் சமூகத்தினரில் பலர் தமிழில் சரளமாகப் பேசுவர். வேறு சிலருக்கோ மலாய் மட்டும் சரளமாகப் பேச வரும். சிலர் ஹாக்கியன், கென்டனிஸ் போன்ற சீன மொழிகளில் பேசுவர்.

தாங்கள் இந்துக்கள் என்றும் குறிப்பாக சைவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இரு மகள்களுக்குத் தந்தையான திரு பொன்னுசாமி கூறினார். அத்துடன், தங்கள் கலாசாரத்தில் சீனப் பாரம்பரியங்களுக்கு ஒத்த முன்னோர் வழிப்பாடு இருப்பதாகச் சுட்டினார். ஆலயம் செல்வது, சாமியாடிகளை நாடுவது போன்ற சமயக்கூறுகளும் தங்களுக்கு வழக்கில் இருப்பதாக அவர் கூறினார்.

சமூக அங்கீகாரம்

அதிபர் எஸ். ஆர். நாதனுடன் (நடுவில்) திரு பொன்னுசாமி காளஸ்திரி மற்றும் ‘செட்டி மலாக்கா’ சமூகத்தினர். படம்: டினேஷ் குமார்

மலாக்காவின் தற்போதைய ‘கம்போங் செட்டி’ முன்னதாக காஜா பேராங் என்று அழைக்கப்பட்டது. அந்த கிராமத்திலிருந்து 18ஆம் நூற்றாண்டில் தம் மூதாதையர்கள் சிங்கப்பூருக்கு வந்ததாக திரு பொன்னுசாமி கூறினார்.

சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதனின் ஊக்குவிப்பில் 17 ஆண்டுகளுக்கு முன்னதாகத் தொடங்கப்பட்ட செட்டி மலாக்கா சங்கம், தங்கள் கலாசாரம் பற்றிய விழிப்புணர்வைப் பொதுமக்களிடையே ஏற்படுத்த முனைந்துள்ளது. சங்கத்தின் தலைவராக திரு பொன்னுசாமி தற்போது செயல்பட்டு வருகிறார்.

தம் சமூகத்தைச் சித்திரிக்கும் 10 அரிய நிழற்படங்களை, 39 ஆர்மினியன் ஸ்திரிட்டிலுள்ள பெரானாக்கான் அரும்பொருளகத்திற்காக திரு பொன்னுசாமி நன்கொடை அளித்திருந்தார்.

இதற்காக அக்டோபர் மாதத் தொடக்கத்தில் தேசிய மரபுடைமைக் கழகம் அவருக்கு ‘மரபுடைமைப் புரவலர்’ விருதை வழங்கியது.

தீபாவளிக்கு முன்பான சடங்குகள்

தீபாவளிக்கு முன்னதாக முன்னோருக்குத் தீபாவளி படையல் வழிபாடு செய்வது போல செட்டி மலாக்கா சமூகத்தினரும் செய்வதுண்டு. இவர்களது பண்பாட்டில் அந்தச் சடங்கு முக்கிய அங்கம் வகிக்கிறது.

ஏழு அல்லது ஐந்து நாட்களுக்கு முன்னர் ‘நைக் புக்கிட்’ எனப்படும் மூதாதையர்களின் கல்லறைகளைச் சுத்தப்படுத்தும் நிகழ்வு நடைபெறுகிறது. இது ‘சிங் மிங்’ என்ற சீனச் சடங்கிலிருந்து தோன்றிய வழக்கமாகும்.

செட்டி மலாக்கா சமூகத்தினர் இறந்தவரைப் புதைப்பது பாரம்பரியம் என்றாலும் இன்று பலர் இடுகாடு போவதற்குப் பதிலாக வீட்டிலேயே இச்சடங்கைச் செய்கின்றனர். இதற்காக அவர்கள், ‘நாசி லெமாக்’ எனப்படும் தேங்காய்ப்பால் சோற்றுடன் 10, 11 வகையான குழம்பு வகைகளச் சமைத்துப் படைப்பர்.

தீபாவளியன்று இறைச்சி, கோழி வகைகளை ‘சம்பால் பிளாச்சான்’ அல்லது ‘ரென்டாங்’ வகையான கறிக்குழம்புடன் நெய் சோறு சமைக்கப்படும். ‘குவே பவ்லு’, ‘குவே ரோஸ்’, ‘வாஜெக் புத்தே’, ‘புட்டுக் கச்சாங்’ உள்ளிட்ட மலாய் பலகாரங்களும் சமைக்கப்படும். லவ்க் பின்டாங் எனப்படும் முள் வாளை மீன் குழம்பு முக்கியமான உணவுவகை என்று திரு பொன்னுசாமியின் உறவினர்களில் ஒருவரான திருவாட்டி மர்லின் பிள்ளை, 70, குறிப்பிட்டார்.

பெரானக்கான் அரும்பொருளகத்தில் வைக்கப்பட்டுள்ள திரு பொன்னுசாமி காளஸ்திரியின் மூதாதையர் புகைப்படம். படம்: டினேஷ் குமார்

தீபாவளியைத் தவிர, போகி மற்றும் ‘பராச்சு புவா புவான்’ பெருநாளை செட்டி மலாக்கா சமூகத்தினர் கொண்டாடுகின்றனர். இத்திருவிழாக்களின்போது வாழையிலைகளில் முன்னோருக்கு உணவு படைக்கப்படும்.

தீபாவளி ஆடைகள், அணிகலன்கள்

தீபாவளிக்குப் புத்தாடை வாங்கும்போது செட்டி மலாக்கா சமூகத்தினர் பலர், பாரம்பரிய இந்திய ஆடைகளையும் மலாய் ஆடைகளையும் வாங்குகின்றனர்.

“என் தாயார் வழக்கமாக கெபாயாவைத்தான் அணிவார். சேலை கட்டுவது அரிது. சேலையை அவர் என் உதவியுடன்தான் கட்டுவார்,” என்று திரு பொன்னுசாமியின் மற்றோர் உறவினர் ஜெயலட்சினி குருசாமி, 73, கூறினார்.

எந்த ஆடையை அணிவது என்பது யார் வீட்டுக்குச் செல்கிறோம் என்பதைப் பொறுத்தது என்கிறார் திருவாட்டி மர்லின். ஆனால், ஆடைகள் எதுவாக இருந்தாலும் நெற்றிப்பொட்டுடன் தாலி, அட்டிகை, ஜிமிக்கி உள்ளிட்ட தமிழர் நகைகளைத் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் அணிவதாக அவர் குறிப்பிட்டார். ஆண்கள் ‘சாரோங்’ மற்றும் ‘சொங்கோக்’கைப் போன்ற, ‘பாத்தேக்’ துணியால் செய்யப்பட்ட தலைப்பாகையைப் பாரம்பரியமாக அணிவர்.

“செட்டி மலாக்கா சமூகத்தினர் அல்லாத ஓர் இந்தியரைத் திருமணம் செய்துகொண்டேன். எனவே, என் மாமியாரைப் பார்க்கச் செல்லும்போது சேலை அணிந்துகொள்வது வழக்கம்,” என்று அவர் கூறினார்.

திருமணம் செய்த பின் 50 ஆண்டுகளாகத் தீபாவளிக் கொண்டாடி வரும் திரு பொன்னுசாமியின் மனைவி டோரா வூ, 72, இது உற்சாக உணர்வு ஊட்டும் ஒரு காலகட்டம் என்றார்.

“என் சொந்த கலாசாரத்துடன் இந்திய, மலாய்ப் பண்பாடுகளைப் பற்றிய புரிதலும் காலப்போக்கில் அதிகரித்தது,” என்று சீன இனத்தவரான திருவாட்டி டோரா கூறினார்.

‘நாங்களும் தமிழர்கள்’

பாரம்பரிய உடையில் திரு பொன்னுசாமியின் பெற்றோர் (கீழ்ப்படம்), அவரது இளமைக்கால புகைப்படங்கள் (மேல் படங்கள்). படம்: டினேஷ் குமார்

இளம் வயதில் தேசிய அளவில் நடத்தப்பட்ட மலாய் பேச்சுப் போட்டிக்காகத் தங்கப் பதக்கம் வென்ற திரு பொன்னுசாமிக்கு தமிழ் நன்கு புரிந்தாலும் சரளமாகப் பேசப் பழகவில்லையே என்ற மனக்குறை உள்ளது. இதற்கு மாறாக, திருவாட்டி ஜெயலட்சினி தமிழ், ஆங்கிலம், மலாய், ஹாக்கியன், கென்டனிஸ் ஆகிய மொழிகளை நன்கு பேசுகிறார்.

கடையில் தங்களுக்குள் மலாய் பேசும்போது தாங்கள் மலாய்க்காரர்களா என்று தமிழ்க் கடைக்காரர்கள் சிலர் கேட்பதாக திருவாட்டி ஜெய லட்சினி கூறினார்.

“இல்லை, நாங்கள் தமிழர்கள் என்று சொல்வேன்,” என்றார்.

வீட்டில் பெரியவர்கள் மலாய் பேசிய சூழலில் வளர்ந்த திருவாட்டி ஜெய லட்சினி, இளம் வயதில் தமிழில் சரளமாகப் பேசவில்லை என்றாலும் இப்போது நன்றாகப் பேசுகிறார்.

“என் அப்பா தமிழில் நன்றாக எழுதப் படிக்கத் தெரிந்தாலும் வீட்டில் எங்களிடம் ஆங்கிலம் பேசுவார். தாயாரும் பாட்டியும் மலாய்கூட பேசுவர். எங்கள் வளர்ப்பு அப்படித்தான்,” என்று அவர் கூறினார்.

இந்தச் சமூகத்தினரில் தமிழ் பேசத் தெரியாதவர்களின் நாவிலும் தமிழ்ச் சொற்கள் நவில்கின்றன. பசித்தால் கருவாட்டுக் குழம்பு, வலித்தால் ‘அம்மா’ என்று தமிழ் அனைவரிடத்திலும் சிறிதளவாவது கலந்திருப்பதாக திருவாட்டி மெர்லின் கூறினார்.

தமிழ் மொழியின் புழக்கத்தை வலுப்படுத்த பெற்றோர் தங்கள் பிள்ளையிடம் அதிகம் பேசவேண்டும் என்று திருவாட்டி மெர்லின் ஒப்புக்கொள்கிறார். இருந்தபோதும் தமிழைச் சரளமாகப் பேசாமல் போனவர்களின் அடையாளப்பற்றும் இனப்பற்றும், தமிழ் பேசுவோருக்குச் சளைத்தவை அல்ல என்றார்.

“மலாய், சீனர்களைத் திருமணம் செய்துகொண்டாலும் நம் கலாசாரத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம். குறிப்பாக, நாங்கள் அம்மன், முருகன் தெய்வங்களை அதிகம் வணங்குவோம்,” என்று அவர் கூறினார். ஆசிய கலாசாரங்களின் சாரத்தை உள்வாங்கிக்கொண்டு இந்துவாகவும் தமிழராகவும் திகழ்வதில் பெருமைகொள்வதாக இந்தச் சகோதரிகள் கூறுகின்றனர்.

சிங்கப்பூரின் அடையாளத்திற்கும் ஒட்டுமொத்த கலாசாரத்திற்கும் உருவமாக செட்டி மலாக்கா சமூகம் திகழ்வதாகக் சொல்வதில் பெருமைப்படும் திரு பொன்னுசாமி, தங்கள் சமூகத்தினர் பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கவேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!