குடும்பத்தினரால் கைவிடப்பட்ட முதியவர்கள் வசிக்கும் ‘சன்லவ்’ இல்லத்தை, தமிழாசிரியர் விக்னேஸ்வரி ரெத்தினம், 43, ஒரு கோயிலாகக் கருதுகிறார்.
திருவாட்டி விக்னேஸ்வரியின் தீபாவளி, கடந்த 15 ஆண்டுகளாக சன்லவ் முதியோர் இல்லத்தில்தான் தொடங்கும். 2008ல் தம் தந்தை காலமான ஆண்டிலிருந்து இவ்வழக்கம் தொடங்கியது.
கொவிட்-19 தொடங்கியது முதல் மதிய உணவுக்கு மட்டுமே ஏற்பாடு செய்து வந்த திருவாட்டி விக்னேஸ்வரி, இம்முறை இல்லவாசிகள் அனைவரையும் நேரில் காண்பதில் மகிழ்ச்சி கொள்கிறார்.
“தீபாவளியன்று குடும்பத்தாருடன் கோயில் செல்லும் அனுபவம் குதூகலமாக இருக்கும். ஆனால் என் தந்தை காலமான ஆண்டில் கோயில் போக முடியவில்லை,” என்று அவர் கூறினார்.
முதியோர் இல்லத்திற்குப் போவதாக அறிவித்த நண்பர் ஒருவரின் ஃபேஸ்புக் பதிவைக் கண்ட பிறகு, அவருடன் இணைந்து செல்ல திருவாட்டி விக்னேஸ்வரி முடிவுசெய்தார்.
முதியாேர் பலரின் வாழ்க்கைக் கதைகளைக் கேட்டது திருவாட்டி விக்னேஸ்வரிக்குத் திருப்புமுனையாக அமைந்தது.
சிரமப்பட்டு பிள்ளைகளை வளர்த்து, பின் அவர்களாலேயே கைவிடப்படும் நிலைமைக்கு ஆளாவதை எண்ணி விக்னேஸ்வரி கலங்கினார்.
“விழிப்புணர்வும் கல்வியறிவும் அதிகரித்திருந்தாலும் பிள்ளைகள் பெற்றோரைப் பண்டிகைக் காலத்தில் கவனிப்பதில்லை என்பதை அன்றுதான் அறிந்தேன்,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
திருவாட்டி விக்னேஸ்வரியும் அவரின் நண்பர்களும் கிட்டத்தட்ட 500 பேருக்கு உணவு பரிமாறுவர். சோறு, கோழிக்குழம்பு உள்ளிட்ட உணவு வகைகளைப் பண்டிகைக் காலத்தில் ருசிக்கும் முதியோர், நன்றி கலந்த மகிழ்ச்சியுடன் இருப்பதைக் கண்குளிரக் காண்கிறார் விக்னேஸ்வரி. மதிய உணவுடன் கலைநிகழ்ச்சி அங்கமும் இடம்பெறுவது வழக்கம்.
இதுபோன்ற உதவிகளைத் தனிமனிதராகச் செய்யும் அளவுக்குத் தாம் பணபலம் படைத்தவர் அல்ல என்பதால் படைபலத்தை நம்பியிருக்கிறார் திருவாட்டி விக்னேஸ்வரி. தேசிய தினம், கிறிஸ்மஸ் தினம் ஆகிய கொண்டாட்டங்களையும் நடத்தி வரும் திருவாட்டி விக்னேஸ்வரி, இதுபோல பலரும் செய்யவேண்டும் என விரும்புகிறார்.


